Khub.info Learn TNPSC exam and online pratice

எதிர்ப்புகள், போராட்டங்கள், சுதந்திர போராட்டமும் REVOLTS, UPRAISALS, FREEDOM STRUGGLE

Q1. ஆங்கிலேயருக்கு எதிராக முதன் முதலாக குறிப்பிடும்படியான எதிர்ப்பை தெரிவித்தது யார்?
வீரபாண்டிய கட்டபொம்மன்: – 1792-1799. நாயக்க பரம்பரையை சேர்ந்த இவர், பாஞ்சாலங்குறிச்சி என்ற (தூத்துக்குடி மாவட்டம்) பகுதியை ஆண்டு வந்த மன்னன். இவருடைய காலத்தில் ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து, அவர்களுக்கு அடிபணிய மறுத்து வந்தவர்.

Q2. யாருடைய உதவியுடன் (துரோகச் செயல்) ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்ட பொம்மனை சிறை பிடித்து கொலை செய்தனர்?
எட்டயப்பன் -- இவருடைய உதவியால் கட்டபொம்மனை கைது செய்து 16 அக்டோபர் 1799 அன்று கயத்தார் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார். எட்டயப்பன் இந்த செயலால், துரோகம் செய்பவர்களை எட்டயப்பன் எனும் பெயரில் அழைக்கும் பழக்கம் நிலவுகிறது.
Q3. ஒரிஸ்ஸாவின் பாயக் என்பவர்களின் புரட்சிக்கு காரணம் என்ன?
பாயக் என்ற ஒரு போராளி இன மக்கள் ஜமீந்தார்களின் வாடகையில்லா நிலங்களில் வசித்து வந்தனர். இப்பகுதியை 1803ல் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து, பாயக் இன மக்கள் மீது, நிலவரிகளை திணிக்கத் துவங்கினர். இதை எதிர்த்து வந்த இந்த மக்கள் முடிவில் 1804-1806 க்கு இடையில் தீவிர போராட்டமாக்கினர். இதை முன் நின்று நடத்தியவர்கள் -- குர்தா பகுதியை ஆண்ட மன்னரும், பிறகு ஜகபந்து என்பவரின் கீழும் நடந்தது. 1817ல் பாயக் மக்களுடன் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, நாளடைவில் அவர்களை அடிபணிய வைத்தனர்.
Q4. வேலு தம்பி என்பவர் யார், அவர் ஆங்கிலேயரை எதிர்க்கக் காரணம் என்ன?
1808-1809 – வேலு தம்பி என்பவர் திருவாங்கூர் ராஜ்யத்தில் திவான் (நிதி மந்திரி) ஆக பணி புரிந்து வந்தவர். ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட அதிகமான நிதிச் சுமை, அதற்கு மேல் சபையில் இருந்த ஆங்கிலேய பிரதிநிதியின் விதி மீறிய அழுத்தங்களும், இவரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தை தூண்டியது. இக்காலக்கட்டத்தில், இவர் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய போரில் காயப்பட்டு மரணம் அடைந்தார்.
Q5. குஜராத்தின் கச் மற்றும் கத்தியாவார் பகுதிகளில் ஆங்கிலேயருக்கு எதிராக போராட காரணம் என்ன?
1816-1819 - ஆங்கிலேயர்களின் எல்லை விரிவாக்க முயற்சிகள், புதிய பகுதிகளைக் கைப்பற்றுதல் மற்றும் தங்களுடைய நிர்வாகத்தில் ஆங்கிலேயர்களின் தலையீடு அதிகமாக இருந்ததால், அந்த பகுதியை ஆண்டு வந்த ராவ் பர்மல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடத் துவங்கினார். ஆனால், ஆங்கிலேயர்களை சமாளிக்க முடியாமல், தோல்வி அடைந்து, அந்த பகுதி ஆங்கிலேயர் வசம் ஆயிற்று.
Q6. ராமோசிஸ் புரட்சி என்பது என்ன?
1822-1829 – ஆங்கிலேயர்களால் பேஷ்வா பகுதிகள் கைப்பற்ற பட்டதினால், பூனாவை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழ்ந்த ராமோஸி இனத்தவர் வேலை வாய்ப்புகள் இழந்து ஏழ்மையை சந்திக்க, பல்வந்த் சிங் ஃபாட்கே, சித்தூர் சிங் மற்றும் உமாஜி தலைமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியை துவக்கினர். இந்த புரட்சி சுமார் ஏழு ஆண்டு காலம் நீடித்தது. ஆங்கிலேயர்களின் பலமறிந்து, ராமோசிஸ் இனத்தவர் ஆங்கிலேயர்களுடன் சமாதானம் ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் ஆங்கிலேயர்கள் அவர்களை மன்னித்து, நிலம், வேலை போன்ற சலுகைகள் அளித்து உதவினர்.
Q7. "கிட்டூர் புரட்சி" “Kittur Rising” என்பது என்ன?
கிட்டூர் என்பது, கர்நாடகாவின் தார்வார் பகுதியில் உள்ள ஒரு பகுதி. 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இந்த பகுதியை சிவலிங்க ருத்ர தேசாய் என்பவர் ஆண்டு வந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, வாரிசு இல்லாத நிலையில், வேறு ஒருவரை மன்னராக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை ஆங்கிலேயர்கள் ஏற்க மறுத்து, அந்த பகுதியை கைப்பற்ற முயற்சி செய்யவே, மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1824ல் போர் துவக்கினர். இதில் ஆங்கிலேய அதிகாரிகள் சிலரும், ஒரு இந்திய அதிகாரியும் கொலை செய்யப்பட்டனர். இருப்பினும், ஆங்கிலேயர்கள் அந்தப் பகுதியை போரிட்டுக் கைப்பற்றினர். இருப்பினும், ராயப்பா என்பவர், 1829ல் சுதந்திரம் அறிவித்துக் கொண்டு, ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட இளைஞரை தலைவராக்கி ஆட்சியை தொடர்ந்தார். இருப்பினும், ஆங்கிலேயர்கள், ராயப்பாவையும், சன்னம்மா என்ற ராணியையும் சிறைபிடித்து, ராயப்பா கொலை செய்யப்பட்டார், சன்னம்மா தார்வார் சிறையில் இறந்தார். இவ்வாறாக, கிட்டூர் பகுதி ஆங்கிலேயர் வசம் வந்தது.
Q8. சம்பல்பூர் (ஒரிஸ்ஸா) திடீர் கிளர்ச்சி என்பது என்ன, காரணம் என்ன?
1827-1840 – இந்த பகுதியை ராஜா மகாராஜா சாய் என்பவர் ஆண்டு வந்தார். இவருடைய மறைவு காரணமாக அவருடைய துணைவி மோகன் குமாரி அரசுக்கு வருவதை சுரேந்திர சாய் என்பவர் எதிர்த்து உள் குழப்பம் ஏற்பட்டது. அதே சமயம், ஆங்கிலேயர்கள் இவர்களுடைய உள் குழப்பத்தில் அதிகமான தலையீடும் செய்ததால் அது ஒரு பெரும் கிளர்ச்சியாக மாறியது. ஆங்கிலேயர்கள் மீண்டும் தலையிட்டு, சுரேந்திர சாயை சிறைபிடித்து, நிலைமையை சீர் செய்து, அந்த பகுதியை 1840ல் தங்கள் வசமாக்கினர்.
Q9. சத்தாரா கிளர்ச்சி என்பது என்ன?
1840-1841 – சத்தாரா (பூனே அருகில்) பகுதியை ஆண்டு வந்த ப்ரதாப் சிங் என்ற புகழ்பெற்ற ஆட்சியாளரை ஆங்கிலேயர்கள் சிறைபிடித்து, நாடு கடத்தப்பட்டார். இதற்கு எதிர்ப்பாக, சத்தாரா மக்கள், தார் ராவ் தலைமையிலும், மற்றொரு குழு நரசிங் தலைமையிலும் 1841ல் பதாய்ன் என்ற இடத்தை கைப்பற்றினர். இருப்பினும், ஆங்கிலேயர்கள், இந்த கிளர்ச்சியை அடக்கி, நரசிங் நாடு கடத்தப்பட்டார். இவ்வாறாக இந்த கிளர்ச்சி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சத்தாரா முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது.
Q10. பண்டேலா கிளர்ச்சி என்பது என்ன, முடிவு என்ன?
1842 – பண்டெல்காண்ட் (மத்திய இந்தியாவில் உத்திரபிரதேசத்துக்கும் மத்திய பிரதேசத்துக்கும் இடைப்பட்டப் பகுதி) பகுதியின் சாகர் மற்றும் தாமோ பகுதியில், ஆங்கிலேயர்கள நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகளை எதிர்த்து, மதுகர் ஷா மற்றும் ஜவாஹிர் சிங் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிரில் கிளர்ச்சி செய்து, சில ஆங்கிலேயர் அதிகாரிகள் கொலைசெய்யப்பட்டனர். நிர்வாகம் முடங்கியது. கடைசியில் இருவரும் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, நிலைமை சீராக்கப்பட்டு ஆங்கிலேயர் வசம் முழுமையாக அடைந்தது.
Q11. கட்காரி புரட்சி என்பது என்ன, எவ்வாறு ஒடுக்கப்பட்டது?
1844-1845 – மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் வாழ்ந்த, முந்தைய அரசர்களுக்காக போராடிய போராளிகள். இவர்கள் மன்னர்களுக்கு செய்த சேவைகளுக்காக அளிக்கப்பட்ட இலவச நிலங்களில் வாழ்ந்து வந்தனர். ஆங்கிலேயர்கள் அந்த நிலங்களின் மீது வரிகளை திணித்ததால், கோபமுண்டு, கோலாப்புர் பகுதிகளில் ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். கடைசியில் ஆங்கிலேயர்கள் இந்த கிளர்ச்சியை அடக்கி நிலைமையை சீர் செய்தனர்.
Q12. சதவந்தி கிளர்ச்சி என்பது என்ன, எவ்வாறு ஒடுக்கப்பட்டது?
1839-1845 – சதவந்தி மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பகுதி. இந்த பகுதியை ஆண்டு வந்த கான் சவந்த் என்பவரை ஆங்கிலேயர்கள் பதவி நீக்கம் செய்து, தனது அதிகாரியை நிர்வகத்தில் அமர்த்தினர். இதை எதிர்த்து, ஃபோண்ட் சவந்த், மற்றும் சில தலைவர்கள் தலைமையில் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் துவக்கினர். ஆங்கிலேயர்கள் ராணுவ ஆட்சியை வைத்து இந்த கிளர்ச்சியை ஒடுக்கினர்.
Q13. ராஜூ கிளர்ச்சி என்பது என்ன, எவ்வாறு முடிவுக்கு வந்தது?
1827-1833 – விசாகப்பட்டினம் ஆந்திர பிரதேசத்தில் நடந்த கிளர்ச்சி. வீரபத்ரர் என்பவரின் அனைத்து சொத்து, பதவி பறிக்கப்பட்டு சிறிய ஓய்வூதியத்தில் பதவி விலக்கம் செய்தனர். இதை எதிர்த்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, கடைசியில் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
Q14. பாலகொண்டா கிளர்ச்சி என்பது என்ன, முடிவு என்ன?
1831-1832 – பால கொண்டா, ஆந்திரபிரதேசம். இந்த பகுதியில் இருந்த ஜமீந்தாரின் நிலங்கள், நில வருவாய் பாக்கி இருந்ததால், பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜமீந்தார்கள் கிளர்ச்சி நடத்தி தோல்வி கண்டனர்.
Q15. கம்சூர் கிளர்ச்சி என்பது என்ன?
1835-1837 – கம்சூர் என்பது கஞ்சம் மாவட்டத்தில் ஆந்திரபிரதேசத்தில் உள்ளது. இங்கு தனஞ்செய பாஞ்சா என்பவர் ஜமீந்தாராக இருந்தார். இவர் நில வருவாயை சரிவர செலுத்தாததால், ஆங்கிலேயர்கள் ரஸ்ஸல் என்பவரை கமிஷனராக நியமித்தனர். இதை எதிர்த்து அவர் கிளர்ச்சி செய்யவே, ராணுவ நடவடிக்கையால் இந்த கிளர்ச்சி 1837ல் ஒடுக்கப்பட்டது.
Q16. பர்லகிமேடி கிளர்ச்சி என்பது என்ன?
1829-1835 – பர்லகிமேடி ஒரிஸ்ஸாவில் உள்ள ஒரு இடம். இங்கு ஜமீந்தாராக இருந்த ஜகந்நாத் கஜபதி நாராயண ராவ் என்பவ்ரின் சொத்துக்கள், நில வருவாய் சரியாக செலுத்தப்படாததால் ஆங்கிலேயர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. மக்கள் ஆதரவுடன் ஜமீந்தாரின் இந்த கிளர்ச்சி ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்டது.
Q17. ஃபரைசிஸ் Faraizis இயக்கம் என்பது என்ன?
1804-1860 – கிழக்குவங்காளத்தில், ஒரு மத இயக்கமாக ஷரியத்துல்லா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், ஆங்கிலேயர்கள் இஸ்லாமியத்திற்கு எதிராக செயல்படுவதாக எதிர்த்து வந்தனர். அவருடைய மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கம், தூது மியான் என்பவர் தலைமையில், அரசியல் ரீதியாகவும், ஜமீந்தார்கள் மற்றும் அவுரி எனப்படும் இண்டிகோ விவசாயம் செய்பவர்களுக்கு எதிராக போராடத் தொடங்கியது. தூது மியான் கைது செய்ய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிற்காலத்தில், இந்த இயக்கம் வஹாபி இயக்கத்துடன் இணைந்தது.
Q18. வஹாபி இயக்கம் என்பது என்ன?
இந்த இயக்கம் மத்திய இந்தியா, டெக்கான் மற்றும் கிழக்கு வங்காள ஷேர்பூர் பகுதிகளில் நிலவியது. இது உலக இஸ்லாமியர்களுக்கு இடையிலான இயக்கம். இந்த இயக்கம், மத சீர்திருத்தம், கையூட்டு செயல்களுக்கு எதிராகவும், இஸ்லாமியத்திற்கு எதிராக செயல்படும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் இயங்கிய இயக்கம்.
Q19. இந்தியாவில் வஹாபி இயக்கத்தை தொடக்கியவர் யார்?
பரேலி (உ.பி) நகரின் அஹமது என்பவரால் 1820ல் நிறுவப்பட்டு, பீஹார், வங்காளம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் பரவியிருந்தது. 1842 களில் மேலும் தீவிரமடைந்து, யாஹ்யா அலி, முகமது ஹூசைன் மற்றும் ஃபர்ஹத் ஹூசைன் ஆகியோர் ""காலிஃபா"" என்ற மத உயர் பதவிக்கு உயர்த்தப்பட்டு இஸ்லாமியர்களின் தலைவராக அறிவிக்கப்பட்டனர். இவ்வாறாக பரவிய இந்த இயக்கம், 1847களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தங்கள் இயக்கப் போராட்டத்தை நடத்த துவங்கினர். இந்த இயக்கம் ஆங்கிலேயர்களை விரட்டுவதிலும், 1857 சிப்பாய் கலகத்தில் பெரும்பங்கு கொண்டனர். இயக்கம் தீவிரமடையவே, ஆங்கிலேயர்கள் மேற்கூறிய தலைவர்களை கைது செய்து அந்தமான் சிறைக்கு அனுப்பிவிட்டு, இந்த இயக்கத்தின் விரிவை தடுத்து ஒடுக்கினர்.
Q20. வஹாபி இயக்கம், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இயங்கியது மட்டுமில்லாமல், வேறு எந்த இனத்தவருக்கு எதிராகவும் இயங்கினர்?
சீக்கியர்கள் -- 1826-1831 காலத்தில் சீக்கியர்களுக்கு எதிராக போர்களும் நடத்தினர். 1831ல் நடந்த போரில் பாலகோட் நகர சய்யித் அஹமத் என்பவர் கொலை செய்யப்பட்டு, இந்த சீக்கியருக்கு எதிரான இயக்கம் சற்று தளர்ந்தது.
Q21. சய்யித் அஹமது மறைவுக்குப் பிறகு வஹாபி இயக்கத்தை வழி நடத்தியவர் யார்?
விலாயத் அலி -- Vilayat Ali – இவர், இஸ்லாமிய மத குரு மௌல்வி நசீருத்தீன் என்பவரை சீக்கியர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட நியமித்தார். மகாராஜா ரஞ்சித் சிங் இறந்த உடன், பஞ்சாபின் சில பகுதிகளை இவர்கள் கைப்பற்றினர். இருப்பினும், ஆங்கிலேயர்கள் பஞ்சாபை கைப்பற்றியவுடன், வஹாபியர்கள் 1847ல் தோற்கடிக்கப்பட்டு பஞ்சாபிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Q22. 1847க்கு பிறகு, அது முழுவதுமாக அடக்கப்படும் வரை, வஹாபி இயக்கம் என்ன ஆனது ?
1. விலாயத் அலி 1852ல் இறந்த பிறகு, பல தலைவர்களுக்குப் பிறகு, அவருடைய மகன் அப்துல்லா தலைவரானார். சித்தானா (வட மேற்கு பகுதி) விலிருந்து இந்த இயக்கத்தை நடத்தி வந்தார்.
2. 1850-1853 களில், ஆங்கிலேயர்கள் வஹாபிகளை அடக்க பல முயற்சிகள் நடத்தி, கடைசியில் 1853ல், வஹாபிகள் ஆங்கிலேயர்களுடன் போர் நடத்தி படு தோல்வி அடைந்தனர்.
3. 1857 சிப்பாய் கலகத்தில் வஹாபிகள் பங்கு பெறவில்லை. 4. 1863ல், ஜெனரல் கார்வாக் தலைமையிலான ஆங்கிலேய படை, வஹாபிகளை முழுவதுமாக அடக்கினர்.
5. அம்பாலா (மே 1864), பாட்னா (1865), மால்டா (1870), ராஜ்மஹால் (1870) ஆகிய இடங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு, வஹாபி தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறாக, ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கம், நேரடியாக இந்திய சுதந்திரத்துடன் சம்பந்தமில்லாத இயக்கம், முடிவுக்கு வந்தது.
Q23. "குக்கா இயக்கம்" என்பது என்ன?
பஞ்சாபில் சீக்கிய மத சீர்திருத்தத்திற்காகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடவும் அமைக்கப்பட்ட ஒரு இயக்கம்.
Q24. "குக்கா இயக்கம்" யாரால் நிறுவப்பட்டது?
19ம் நூற்றாண்டில், பகத் ஜவஹர் மால், (சியான் சாஹிப் என சிறப்பு பெயர்) என்றவரால் மேற்கு பஞ்சாப் பகுதியில் நிறுவப்பட்ட மதம் சார்ந்த ஒரு இயக்கம்.இவரைத் தொடர்ந்து பாலக் சிங், ராம் சிங் என்பவர்கள் தலைவர்களாக வந்த போது, இந்த இயக்கம் அதிகமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
Q25. "குக்கா" இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் என்ன? என்ன முடிவு?
குக்கா இயக்கம் முக்கியமாக ஜாட் இன மக்களை அதிகமாக தங்கள் படையில் சேர்த்துக் கொண்டு, ராணுவ பயிற்சி அளித்தனர். ஆங்கிலேயர்களுடன் நேரடியாக மோதலில் இறங்கினர். கடைசியில், ஆங்கிலேயர்களின் படை பலத்தால், இவர்கள் சரணடைந்தனர். 1872ல் அப்போது லூதியானா வின் துணைக் கமிஷனர் கோவன் என்பவரால், குக்கா வீரர்கள் அனைவரும் கைப்பற்றப்பட்டு, கொல்லப் பட்டனர்.
Q26. ஆங்கிலேயருக்கு எதிராக பழங்குடி இனமக்களின் கிளர்ச்சிகள் எவை?
கல்வியறிவு மற்றும் அவர்களுடைய வாழ்க்கை சிறு சிறு கூட்டங்களாக மலைப்பகுதிகளில் இருந்ததால், அவர்களுடைய இடங்களையும் பகுதிகளையும் கைப்பற்றுவதில், ஆங்கிலேயர்களுக்கு மிகவும் எளிதானது. இருப்பினும், இவர்களில் சிலர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உள்ளனர். எவ்வகை ராணுவ உபகரணங்கள், அனுபவம், படை பலம் இல்லாததால் இவர்கள் கடைசியில் ஆங்கிலேயர்களிடம் தோல்வி அடைந்தனர். அவர்கள்:
1. சுவார் -- CHUARS – 1768-1832 – நௌபூம் மற்றும் ப்ரபூம் பகுதிகள், மேற்கு வங்காளம்.
2. பில் -- BHILS – 1818 – 1848 – காந்தேஷ் - மத்திய இந்தியா -- வடமேற்கு மகாராஷ்டிரா.
3. ஹோவ் -- HOS – 1820,1822 and 1832 – சிங்பூம், சோட்ட நாக்பூர் -- சத்தீஸ்கர்.
4. கோலி -- KOLIS – 1824, 1828,1839, 1844-1848 – குஜராத், மகாராஷ்டிரா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி.
5. காசி -- KHASIS – 1829-1832 – அஸ்ஸாம், மேகாலயா காசி மலைப்பகுதி
6. சிங்ஃபோஸ் -- SINGHPHOS – 1830-1839 – அஸ்ஸாம்
7. கோல் -- KOLS – 1831-1832 – சோட்டா நாக்பூர் -- சத்தீஸ்கர்.
8. கோயா -- KOYAS – 1840-1924 – ரம்பா மற்றும் சோடாவரம், ஆந்திரப்பிரதேசம்.
9. கோண்ட் -- KHONDS – 1846-1848, 1855 and 1914 – ஒரிஸ்ஸா மற்றும் ஆந்திரபிரதேசம்.
10. சந்த்தால் -- SANTHALS – 1855-1856 – ராஜ்மஹால் மலைப்பகுதி, பீஹார்.
11. நாயக்தாஸ் -- NAIKDAS – 1858-1859 and 1868 – பஞ்ச் மஹால், குஜராத்
12. கச்சா, நாகா, முண்டா -- KACHA, NAGAS & MUNDAS – 1882, 1899-1900 கச்சேர், அஸ்ஸாம் மற்றும் சோட்டா நாக்பூர், சத்தீஸ்கர் பகுதிகள்.
13. பில் -- BHILS – 1913 – பன்ஸ்வாரா மற்றும் டுங்காபூர், ராஜஸ்தான்.
14. ஆரோன் -- ORAONS – 1914-1915 – சோட்டா நாக்பூர் பகுதி.
15. தேடோ குக்கி -- THADOE KUKIS – 1917-1919 – மணிப்பூர்
16. செஞ்ச்சு -- CHENCHUS – 1921-1922 – நல்லமலா மலைப்பகுதி, ஆங்திர பிரதேசம்.