Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. சுதந்திரத்திற்கு முன் கேரளாவின் வரலாறு எவ்வாறாக இருந்தது?
கேரளாவைப்பற்றிய அதிகார பூர்வமான வரலாறு அதிகமாக தெரியவில்லை. ஆனால் சேரர்களின் வழி வந்தவர்களே இந்த பகுதியை ஆண்டதாக கூறப்படுகிறது. கேரளாவில் தனி மன்னர்களின் ஆட்சி வர்மா வம்சத்தில், ராம குலசேகர வர்மா (1090-1102) உடன் தொடங்கியதாக தெரிகிறது. சிறு சிறு பகுதிகளாக பல சிறு/குறு மன்னரகள் பல பகுதிகளை தனிப்பட்ட முறையில் ஆண்டு வந்ததாலும், கொச்சின் மற்றும் திருவாங்கூர் மன்னர் ஆட்சிகளும், காலிகட் பகுதியை ஆண்ட ஸமோரின் ஆட்சிகளுமே குறிப்பிடும் படியான ஆட்சியாகவும் வரலாற்றில் முக்கியத்துவமும் பெற்றிருக்கிறது. ஸாமோரின் மன்னர்கள் மிகச்சிறிய அளவில் இயங்கியதாலும், பிற்காலத்தில் திருவாங்கூர் வம்சத்தால் அடக்கப்பட்டனர். அதனால் திருவாங்கூர் மற்றும் கொச்சின் ராஜ்யம் இரண்டு மட்டும் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. 16ம் நூற்றாண்டிலேயே, இந்த வம்ச மன்னர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்களுடன் வெவ்வேறு காலகட்டத்தில் பல உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொண்டதால், கடைசி வரை அவர்கள் சுதந்திரமாக இயங்கமுடியவில்லை. இவர்கள் பெருங்காலம் அலங்கார மன்னர்களாக இருந்த காரணத்தாலும், நிர்வாகத்தில் ஈடுபடுத்திக்கொள்ள முடியாததினாலும், இவர்களுடைய கவனம் கலை, இசை, கல்வி ஆகியவற்றை மேம்படுத்தும் வழிகளில் அதிகமாக சென்றது.
Q2. சுதந்திரத்திற்கு பிறகு கேரளாவின் வரலாறு எவ்வகையில் அமைந்தது?
சுதந்திரம் வரையிலும் இந்த வம்ச ஆட்சிகள் தொடர்ந்தன. சுதந்திரத்திற்கு பிறகு 1.7.1949 முதல் ஐக்கிய திருவாங்கூர்- கொச்சின் ராஜ்யமாகவும், ஜனவரி 1950ல் திருவாங்கூர் கொச்சின் மாகாணமாகவும், நவம்பர் 1956 முதல் கேரளா எனவும் மாறியது. இரண்டு வம்சங்களும் இணையும் போது கொச்சினுக்கு ராம வர்மா 18ம், திருவாங்கூருக்கு சித்ர திருநாள் பலராம வர்மாவும் மன்னர்களாகவும் இருந்தனர். இந்த இரண்டு வம்சங்களிலும் பல மன்னர்கள் இருந்த போதிலும் கீழ்க்கண்டவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்களாகவும், பல வகைகளில் அவர்களுடைய சமூக பங்களிப்பு காரணங்களால் நவீன வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.
Q3. திருவாங்கூர் ராஜ்யம் என்பது என்ன?
திருவாங்கூர் ராஜ்யம் KINGDOM OF TRAVANCORE: 1729-1949.சேர வம்சத்தின் கடைசி மன்னர் ராம வர்மா குலசேகரா வால் 1729ல் நிறுவப்பட்டது.""வேநாடு ஸ்வருபம்"" என இந்த ராஜ்யத்தின் முந்தைய பெயரைக் கொண்டும், கூபக ஸ்வரூபம், த்ரிபாப்பூர் ஸ்வரூபம், வாஞ்சி ஸ்வரூபம் ஆகிய சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டது. முதலில் பத்மநாபபுரம் தலைநகராகவும், பிறகு 1745லிருந்து திருவனந்தபுரமாகவும் மாறியது. இவர்கள், திருவனந்தபுரம், கன்னியா- குமரி மற்றும் சில தென் கோடி பகுதிகளையும் ஆண்டு வந்தனர். இந்த வம்ச ஆட்சி வரலாறு மற்றும் அரசியல் ல் மன்னர் மார்த்தாண்ட வர்மா 1729-1758 காலத்திலிருந்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வம்ச மன்னர்கள் பெயர்கள் வர்மா என முடியும் வகையிலும், இவர்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் சிறப்புப் பெயர்களுடன் அழைக்கப்பட்டனர். இந்த அந்த வம்சத்தில் பல மன்னர்கள் இருந்த போதிலும் கீழ்க்கண்ட மன்னர்களே இந்திய சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
Q4. திருவாங்கூர் வம்ச மன்னர்கள் யாவர்?
1. அனிழம் திருநாள் வீரபாலா மார்த்தாண்ட வர்மா -- 1729 - 1758
2. கார்த்திக திருநாள் ராம வர்மா (தர்ம ராஜா) -- 1758 - 1798
3. அவிட்டம் திருநாள் பலராம வர்மா -- 1798 - 1810
4. கௌரி லக்ஷ்மி பாய் -- 1810 -1815
5. கௌரி பார்வதி பாய் -- 1815 - 1829
6. ஸ்வாதி திருநாள் ராம வர்மா -- 1829 - 1846
7. உத்ரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -- 1846 - 1860
8. ஆயில்யம் திருநாள் ராம வர்மா -- 1860 - 1880
9. விசாகம் திருநாள் ராம வர்மா -- 1880 - 1885
10. மூலம் திருநாள் ராம வர்மா -- 1885 - 1924
11. சேது லக்ஷ்மி பாய் -- 1924 - 1931
12. சித்ர திருநாள் பலராம வர்மா -- 1931 - 1948 -- 1971 -- 1991 (மறைவு).
சுதந்திரத்திற்கு பின் கௌரவ நிலையில் :
1. உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -- 1991 -- 2013
2. மூலம் திருநாள் ராம வர்மா -- 2013 --.
Q5. திருவாங்கூர் ராஜ்ய மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் யாவர்?
அனிழம் திருநாள் வீரபால மார்த்தாண்ட வர்மா MARTHANDA VARMA – 1729-1758 – 1706 ல் பிறந்து 1729ல் பதவியேற்றார்.
திருவாங்கூர் ராஜ்யத்தை நிறுவியவர். மிக திறமையான, வீரமான, புத்திசாலியான வீரர். இவர் காலத்தில் நடந்த நிகழ்வுகள்:
1. நவீன கால திருவாங்கூர் ராஜ்யம், பத்மநாபபுரத்தை தலைநகராகக் கொண்டு, உருவாக்கியவர்.
2. 1723ல் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்துடன் ராணுவ பாதுகாப்பு உடன் படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்.
3. ஒரு சக்தி வாய்ந்த ராணுவத்தை உருவாக்கி, முன்னோர்கள் காலத்தில் இழந்த சில பகுதிகளையும், புதுப் பகுதிகளையும் கைப்பற்றினார்.
4. 1741ல் கொலேச்சல் என்ற பகுதியில் நடத்திய போரின் மூலம், டச் ராணுவத்தை வணிகர்களை முழுவதுமாக அவருடைய பகுதியிலிருந்து விரட்டியடித்தார். டச் தளபதியான இஸ்தாச்சியஸ் டி லெனாய் என்பவரை மட்டும், தனது ராணுவத்துக்கு தக்க பயிற்சி அளிக்கவேண்டும் என்ற உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டு, காப்பாற்றி, தனது ராணுவத்தில் சேர்த்துக் கொண்டார். இவருடைய உதவியால் கொச்சி வரை உள்ள பகுதிகளை கைப்பற்றியது மட்டுமின்றி, ஒரு சக்தி வாய்ந்த நவீன ராணுவத்தை உருவாக்கினார்.
5. 8வது நூற்றாண்டில் கட்டப்பட்ட திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை புதுப்பித்தார்.
6. 1758ல் மரணம் அடைந்தார்.
தர்மராஜா கார்த்திகா திருநாள் ராம வர்மா DHARMARAJA KARTHIGA THIRUNAL RAMA VARMA : 1758-1798 – 1733ல் பிறந்து, 1758ல் மார்த்தாண்ட வர்மா மறைவுக்குப் பிறகு பதவிக்கு வந்தவர். 1798 வரை பதவியிலிருந்தார். இவர் தர்ம சாஸ்திர விதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி நடத்தியதால், ""தர்ம ராஜா"" என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டார். இவருடைய காலத்து நிகழ்வுகள்:
1. 1745ல் தலை நகரை, பத்மநாப புரத்திலிருந்து, திருவனந்தபுரத்துக்கு மாற்றினார்.
2. ஸாமோரின் மன்னர் தாக்குதலிலிருந்து கொச்சின் மன்னரை காப்பாற்றினார். இதன் அடிப்படையில் கொச்சின் மன்னருடன் ஒரு நட்புறவு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். இதற்கிடையில், ஸாமோரின் மன்னர்களும் நட்புக்கரம் நீட்டவே, அவர்களுடனும் நட்புறவை ஏற்ப்டுத்திக் கொண்டு, பதிலுக்கு, பரூர் மற்றும் ஆலங்காடு பகுதிகளையும், போர் தொடுத்ததற்காக ஒரு பெருந்தொகை நஷ்ட ஈடாகவும் பெற்றார். இவ்வாறு ஸமோரின் மன்னர்கள் அடக்கப்பட்டனர்.
3. 1789/90ல் திப்பு சுல்தான் தாக்கியபோது, வெற்றிகரமாக 6 மாதம் தடுத்து வந்தார். பிறகு திப்பு சுல்தானை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். ஒரு வழியில் இது திப்பு சுல்தானிடமிருந்து அவரை காத்துக்கொள்ள உதவினாலும், அடுத்த வழியில் ஆங்கிலேயர்களுடன் மேலும் சில உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளும் கட்டாயத்துக்குள்ளானார். காலப்போக்கில் ஆங்கிலேயர்கள் இந்த ராஜ்யத்தின் பாதுகாவலர்கள் ஆகி, மன்னரின் அதிகாரம் கணிசமாக குறைந்து, ஒரு ஆங்கிலேயர் அரசவையில் சேர்க்குபடியாகி, பிற்காலத்தில் முழுமையாக ஆங்கிலேயர்களின் ஆட்சிபுரியும் படி ஆகியது.
4. இவர் ஒரு சிறந்த அறிஞர், கலை மற்றும் இசைக்கு பேராதரவு கொடுத்தவர், கதகளி நடனத்தை முறையாக கற்றுக்கொள்ளும் முறையை வகுத்தார், பல கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இவரே இயக்கினார்.
5. 1798 ல் இவருடை மறைவு ஏற்பட்டது.
உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -- UTHIRAM THIRUNAL MAARTHAANDA VARMA 1846-1860 -- இவருடைய காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்ததாலும், ஆங்கிலேயர்களின் அழுத்தம் காரணமாக, இந்த ராஜ்யம் ஆங்கிலேயர்கள் கீழ் இயங்கும் ஒரு சுதந்திர சிறு மன்னர் - Princely State ஆட்சியாக மாறியது.
Q6. இந்தியா சுதந்திரம் அடைந்த போது திருவாங்கூர் மன்னராக இருந்தவர் யார்?
சித்ர திருநாள் பலராம வர்மா
Q7. திருவாங்கூர் அரசவையிலிருந்த உலகப் புகழ் பெற்ற சித்திரக் கலைஞர் யார்?
ராஜா ரவி வர்மா கோயில் தம்புரான் -- RAJA RAVI VARMA : 1848ல் பிறந்து 1906ல் மறைந்தவர். இவர் பதவிக்கு வரும் போது ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆட்சி பொறுப்பில் இருந்ததால் இவர் ஆட்சியில் ஒரு பெயரளவில் மன்னராக இருந்தார். உலகுக்கு இவர் ஒரு புகழ் பெற்ற சித்திர கலைஞராகவே அதிகம் தெரிந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காவியங்களின் நிகழ்வுகளையும், இந்து கடவுள்களையும் சித்திர வடிவில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என்றே கூறலாம். 1873ல் வியன்னாவில் நடந்த சித்திரக்கலை பொருட்காட்சியில் முதல் பரிசு வென்றவர். இவருடைய பெயரில், கேரளாவில் மாவேளிக்கரா என்ற இடத்தில் ஒரு கலைக்கூட கல்விக்கழகம் இயங்கி வருகிறது.
Q8. கொச்சின் ராஜ்ய வரலாறு என்ன?
கொச்சின் ராஜ்யம் KINGDOM OF COCHIN – சேரர்களின் குலசேகர வம்ச ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், இந்த ராஜ்யம், கொச்சின் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுடன் 1102ல் உருவானதாக தெரிகிறது. இதில் இன்றைய, திருச்சூர், சித்தூர் தாலுக்கா/பாலக்காடு, கொச்சி தாலுக்கா, கனயனூர் தாலுக்கா, ஆலப்புழையின் ஒரு பகுதி, பரவூர் தாலுக்கா/எர்ணாகுளம் ஆகிய பகுதியை அடக்கி இருந்தது. இந்த வம்ச மன்னர்களைப் பற்றிய அதிகார பூர்வமான விவரங்கள் 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே தெரிய வருகிறது. கொச்சின் ராஜ வம்சம் என அழைக்கப்பட்டு, கேரளாவின் பிராமண குல தலைமை ஆக இருந்தது. இந்த மன்னர்களின் பெயர்கள் ""ராமா மற்றும் ரவி"" எனத் தொடங்கி, ""வர்மா"" என்ற பிற்பகுதி அடைப் பெயருடனும், ""தம்புரான்"" என்ற பெயரையும் சேர்த்தும், மலையாளத்தில் ""பெரும்படப்பு ஸ்வரூபம்"" எனவும் அழைக்கப்பட்டனர். இதற்கு மேல், மன்னர்களின் மறைவு மாதம்/இடத்தை வைத்தும் மலையாளத்தில் அடையாளம் கொண்டனர். உதாரணமாக, ""துலாம் மாசத்தில் தீப்பெட்ட தம்புரான்"" என்றும், ""மதராஸில் தீப்பெட்ட தம்புரான்"" எனவும் அழைத்தனர். இவர்களுக்கு முதலில் மகோதயபுரம் தலைநகராகவும், பிறகு 1405 முதல் கொச்சின் தலைநகராகவும் இருந்தது.
16வது நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வருகையுடன் இந்த ராஜ்யம் முக்கியத்துவமும் மேம்பாடும் பெற்றதாக தெரிகிறது.
போர்ச்சுகீசியர்களின் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் 1663 வரை நீடித்ததாக தெரிகிறது. பிறகு 1663 முதல் 1773 வரை டச் உதவியுடன் ஆட்சி நடத்தினர். பிறகு 1773 மற்றும் 1776ல் மைசூர் ஹைதர் அலி யின் தொடர் தாக்குதல்களால், சில பகுதிகளை இழந்தது மட்டுமின்றி, அதிகமான பொருட் சேதமும், பெருந்தொகை நஷ்டஈடும் வழங்கும்படியாயிற்று.
1773ல் திருச்சூர் பகுதி திப்பு சுல்தான் ஆல் கைப்பற்றப்பட்டு 3 ஆண்டுகள் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1795ல் இந்த பகுதி, ஆங்கிலேயர்களின் பாதுகாப்பின் கீழ் வந்தது. 1814ல் ஆங்கிலேயர்களின் பாதுகாப்பின் கீழ் வந்து, சிறிது சிறிதாக 1878ல் முழுவதுமாக ஆங்கிலேயர்களின் கீழ் வந்து, அவர்கள் ஏற்று, ஒரு சிறு மன்னர் ஆட்சியாக princely state சுதந்திரம் வரை இயங்கி வந்தது.
Q9. கொச்சின் ராஜ்ய மன்னர்கள் யாவர்?
இந்த மன்னர்களின் விவரம் 1775 முதல் :
1. ராம வர்மா 8 -- 1775 - 1790
2. ராம வர்மா 9 -- ஷக்தன் தம்புரான் -- 1790 - 1805 (இங்கு தொடங்கியது ஆங்கிலேயர் பாதுகாப்பு)
3. ராம வர்மா 10 -- வெள்ளார்பள்ளியில் தீப்பெட்ட தம்புரான் -- 1805 - 1809
4. கேரள வர்மா 3 -- கர்க்கிடக்க மாசத்தில் தீப்பெட்ட தம்புரான் -- 1809 - 1828
5. ராம வர்மா 11 -- துலாம் மாசத்தில் தீப்பெட்ட தம்புரான் -- 1828 - 1837
6. ராம வர்மா 12 -- எடவ மாசத்தில் தீப்பெட்ட தம்புரான் -- 1837 - 1844
7. ராம வர்மா 13 -- திருச்சூரில் தீப்பெட்ட தம்புரான் -- 1844 - 1851
8. கேரள வர்மா 4 -- வீர கேரள வர்மா -- காசியில் தீப்பெட்ட தம்புரான் -- 1851 - 1853
9. ரவி வர்மா 4 -- மகர மாசத்தில் தீப்பெட்ட தம்புரான் -- 1853 -- 1864 - (நேரடி ஆங்கிலேய ராணி ஆட்சி)
10. ராம வர்மா 14 -- மிதுன மாசத்தில் தீப்பெட்ட தம்புரான் -- 1864 - 1888
11. கேரள வர்மா 5 -- சிங்கம் மாசத்தில் தீப்பெட்ட தம்புரான் -- 1888 - 1895
12. ராம வர்மா 15 -- சர் ஸ்ரீ ராம வர்மா -- 1895 - 1914
13. ராம வர்மா 16 -- மதராஸில் தீப்பெட்ட தம்புரான் -- 1914 - 1932
14. ராம வர்மா 17 -- தர்மராஜா -- சௌவாராவில் தீப்பெட்ட தம்புரான் -- 1932 - 1941
15. கேரள வர்மா 6 -- மிடுக்கண் தம்புரான் - 1941 - 1943
16. ரவி வர்மா 5 -- குஞ்சப்பன் தம்புரான் -- 1943 - 1946
17. கேரள வர்மா 7 -- ஐக்கிய கேரளம் தம்புரான் -- 1946 - 1947- இவர் காலத்தில் இரண்டு ராஜ்யங்களும் இணைக்கப்பட்டு ஒரே திருவாங்கூர்-கொச்சின் மாகாணமாயிற்று. அதனால் தான் இவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இவருக்கு பிறகு ராம வர்மா 18 -- அதிகார பூர்வமாக 1948 முதல் 1964 வரை மன்னராக இருந்த கடைசி மன்னர். பிறகு வந்தவர்கள் கௌரவ மன்னர்களாக இருந்து வருகின்றனர்.
Q10. கொச்சின் ராஜ்ய மன்னர்களுள் யாருடைய காலத்தில் இரண்டு கேரள ராஜ்யங்களும் ஒன்றிணைக்கப்பட்டது, இந்தியா சுதந்தரமும் அடைந்தது?
கேரள வர்மா 7.
Q11. ஸாமோரின் மன்னர்கள் என்பவர்கள் யார், எந்த பகுதியை ஆண்டார்கள்?
கேரள ஸமோரின் (ஸாமுத்திரி) மன்னர்கள் -- ZAMORINS OF KERALA: 12ம் நூற்றாண்டிலிருந்து 1766 வரை ஆண்டனர். இவர்கள் எராடி என்ற நாயர் குல வம்சத்தை சார்ந்தவர்கள். அவர்கள் கோழிக்கோடு, பிறகு காலிகட், பொன்னானி என அழைக்கப்பட்ட இடமும் அதை சுற்றிய சிறு பகுதிகளும் -- மலபார் கடற்கரையோர பகுதிகள் அடங்கும். இது ஒரு ஒருங்கிணைந்த நில பிரபுத்துவ முறையில் ஆளப்பட்டு வந்த பகுதி. இவர்களுடைய இந்த பகுதியில் தான், குறிப்பாக காலிகட், 18.5.1498ல் வாஸ்கோட காம வந்தடைந்தார். ஐரோப்பியர்களின் இந்திய வருகை இவ்வாறு தொடங்கியது. இவர்கள் ஒரு வகையான பழங்குடி தலைவர்கள் முறையில் ஆட்சி நடத்தி வந்தனர். 1766ல் மைசூர் ஹைதர் அலியால் தாக்கப்பட்டு பல பகுதிகள் கைப்பற்றப்பட்டன. 1792ல் ஆங்கிலேயர் பாதுகாப்பு பெற்று, விடுவித்துக்கொண்டு, 1799க்குள் ஆங்கிலேயர்களிடம் அடங்கிவிட்டனர். 1806ல் ஒரு உடன்படிக்கையின் படி, முழுவதுமாக ஆங்கிலேயர் வசம் வந்தனர்.