Khub.info Learn TNPSC exam and online pratice

இசையும் & நாட்டியமும் -- MUSIC & DANCE

Q1.
இப்பகுதியில், சில பாரம்பரிய இசை (கர்நாடகம், இந்துஸ்தானி) மற்றும் நடனம் (பரதநாட்டியம்) ஆகியவற்றை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது ஒரு அடிப்படை தகவல் முறையில் மட்டுமே.

Q2. நம்நாட்டில் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பாரம்பரிய இசைகள் யாவை?
கர்நாடக சங்கீதம்: CARNATIC : மிகப்பழமையான இசை வகை. பல நூற்றாண்டுகளாக மக்களிடையே, குறிப்பாக, தென் இந்திய மாநிலங்களில் -- ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் -- பழக்கத்திலும், தொழில் ரீதியாகவும் மக்களிடையே பரவியுள்ளது. குரல் வழியாகவும், இசை உபகரணங்கள் மூலமாகவும் இசைக்கப்படுகிறது.
இந்துஸ்தானி -- HINDUSTANI: வட இந்தியாவில் மிகவும் பழக்கத்தில் உள்ள இசை வகை. இந்த இசை வடிவம், மிகவும் பிரபலமானதற்கு, இஸ்லாமியர்களின் ஆட்சி பெரும் பங்கு பெறுகிறது. இதில் ""கரானா"" Gharanas எனப்படும் சில வகைகள் உண்டு. குரல் வழியாகவும், இசை உபகரணங்கள் மூலமாகவும் இசைக்கப்படுகிறது.
ரவீந்திர சங்கீதம் -- RABINDRA SANGEETH: நம் நாட்டின் கிழக்கு மாகாணங்களில் அதிகமாக குறிப்பாக, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது. இந்த வகை சங்கீதம், பொதுவாக ரவீந்திர நாத் தாகூரின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. குரல் வழியாகவும், இசை உபகரணங்கள் மூலமாகவும் இசைக்கப்படுகிறது. இவைத் தவிர்த்து, அந்தந்த பகுதிகளுக்கேற்ப, கிராமிய பாடல் வகைகள் (பாணிகள்) பல உள்ளன.
Q3. கிழக்கு இந்திய மாகாணங்களின் பாரம்பரிய இசை வடிவப் பெயர் என்ன?
ரவீந்திர சங்கீதம் -- காரணம், பாடல்கள், இசை வடிவம் பெருமளவில் ரவீந்திர நாத் தாகூரால் தொகுக்கப்பட்டவை.
Q4. வட இந்திய மாகாணங்களின் பாரம்பரிய இசை வடிவப் பெயர் என்ன?
இந்துஸ்தானி.
Q5. தென் இந்திய மாகாணங்களின் பாரம்பரிய இசை வடிவப் பெயர் என்ன?
கர்நாடக சங்கீதம்.
Q6. இயல், இசை, நாடகத்துக்கு மூல கருவாக கருதப்படும் இந்திய நூல் எது?
பரத முனிவரின் "நாட்டிய சாஸ்திரம்".
Q7. இந்து மதத்தின் படி, இசைக் கடவுள் எனக் கருதப்படுபவர் யார்?
சரஸ்வதி.
Q8. எந்த இந்து மதக் கடவுள், பிரபஞ்சத்தின் முதல் மற்றும் தலைமை நாட்டிய கலைஞராக வணங்கப்படுகிறார்?
சிவ பெருமான்.
Q9. கர்நாடக சங்கீதம், ஒரு பழமையான மற்றும் தெய்வீக சங்கீதம் என கருதப்படுகிறது. எந்த புராண காலத்து நூல் இதற்கு ஆதாரமாகக் கருதப் படுகிறது?
சாம வேதம் -- Sama Veda – இதன் படி, கர்நாடக சங்கீதம், புராண காலத்திலிருந்தே இருந்து வருவதாகவும், இசைகளிலேயே முதன்மையானது என்றும், ""நாத ப்ரம்மம்"" எனவும் கூறப்பட்டுள்ளது.
Q10. கர்நாடக இசை, எவற்றை அடிப்படையாகக் கொண்டு இசைக்கப்படுகிறது?
(1) ஸ்ருதி (சுதி) (2) ஸ்வரம் (3) ராகம் (4) தாளம்
Q11. சுதி என்பது என்ன, எந்த உபகரணத்தைக் கொண்டு (முக்கியமாக) நிலை நிறுத்தப்படுகிறது?
ஒரு பாடகரின் குரல் சக்திக்கு ஏற்றவாறு இது நிலை நிறுத்தப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு தான் பாடகர்கள் பாடுவார்கள். இதில் தவறு ஏற்பட்டால் பாடுவதிலும் தவறுகள் ஏற்படும். இந்த இசை ஞானம் உள்ளவர்கள் உடனே இதை மிகவும் இலகுவாக கண்டுபிடித்துவார்கள். தம்பூரா என்ற, மரத்தால் ஆன நீண்ட ஒரு உபகரணத்தில், பல கம்பிகள் பொருத்தப்பட்டு, அதை மீட்டுவதின் மூலம் சுதி நிலை நிறுத்தப்படுகிறது. இந்து மத புராணங்களின் படி, இந்த இசை உபகரணத்தை, நாரதர் கையிலிருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்றைய காலக்கட்டத்தில், தம்பூராவுக்கு பதிலாக, மின்னணு கருவி சுதி பெட்டி என்ற ஒன்றும் புழக்கத்தில் உள்ளது. சுதியில், குரல் சக்திக்கு ஏற்றவாறு பல நிலைகள் உள்ளன.
Q12. ஸ்வரம் என்பது என்ன, கர்நாடக இசையில் இதன் பங்கு என்ன?
கர்நாடக இசை ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது. அவை ச ரி க ம ப த நி எனப்படும். இதை அடிப்படையாகக் கொண்டு பாடும் தன்மையில் வேறுபாடுகள் கொண்டு வரப்படுகிறது. இந்த ஸ்வர நிலைகள் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகின்றன: ச -- ஷட்ஜம்; ரி - ரிஷபம்; க - காந்தாரம்; ம - மத்யமம்; ப - பஞ்சமம்; த -- தைவதம் மற்றும் நி -- நிஷாடம் என அழைக்கப்படுகிறது. இவற்றை மொத்தமாக ""சப்த ஸ்வரங்கள்"" என அழைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரலின் உச்ச, நடுத்தர, கீழ் மட்ட நிலைகளில் பாடுவதற்கு அடிப்படை சூத்திரம்.
Q13. கர்நாடக இசைப் பாடுவதில், குரலின் சப்தத்தை இரண்டு முக்கிய பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது? அவை என்ன?
ஆரோஹணம்: ஏறு நிரல் என்பர் -- ஸ்வரங்களை உயர்த்திக்கொண்டே செல்வது. ( உயர் மட்டக் குரலில் பாடுவது.) அவரோஹணம்: இறங்கு நிரல் -- ஸ்வரங்களை குறைத்துக்கொண்டே செல்வது (கீழ் மட்டக் குரலில் பாடுவது. இரண்டு நிலைகளிலும் 5 லிருந்து 7 நிலைகள் உள்ளது.
Q14. கர்நாடக இசையில் ராகங்கள் என்பது என்ன? அவற்றின் முக்கியத்துவம் என்ன?
ஒரு பாடலை, எந்த முறையில் பாடினால் அதன் மென்மையும், தன்மையும் வெளிப்படும் என்பதை உறுதி செய்து கொண்டு பாடலை பாடுவதற்காக உருவாக்கப்பட்ட வழி முறைகள். ஒரு பாடலின் எந்த பகுதியை உயர் நிலையில், கிழ் நிலையில் பாடுவது என தீர்மானித்து, அதற்கேற்ப எந்த நிலையில் scale பாடுவது என முடிவு செய்வது. அதில் எந்த இடத்தில் பாடலின் ராகத்தில் குரலில் அதிர்வுகளை Gamakas கொடுக்க வேண்டும் என்பதை பாடலை பாடுபவர் அவரது அனுபவத்தின் பேரில் இடத்துக்கேற்ப மாற்றிக் கொள்வார்கள். ராகங்கள் மேலும் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
Q15. ராகங்களை எத்தனை பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள்?
1. ஜனகா -- மேல கர்த்தா ராகங்கள் (Janaka) : இவை அடிப்படை ராகங்கள். இதிலிருந்து தான் மற்ற ராகங்கள் பிறக்கின்றன. இவை சம்பூர்ண ராகங்கள் எனவும் அழைக்கப்படும். இவற்றில், ஏழு ஸ்வரங்களும், மேல் மற்றும் கீழ் நிலைகளில் அடங்கியுள்ளதால், இவ்வாறு அழைக்கப்படுகின்றன. ராகங்கள் சுமார் 72 உள்ளன.
2. ஜன்யா: இவை மேலே கூறப்பட்ட ராகங்களிலிருத்து, பல ராகங்களின் கோர்வைகளின் அடிப்படையில் பிறந்த ராகங்கள். இவ்வாறு பிறந்த ராகங்கள் நிறைய உள்ளன.
Q16. கர்நாடக இசையில், சில பிரபலமான ராகங்களின் பெயர்களைக் கூறுக:
அம்ருதவர்ஷினி, ஆனந்த பைரவி, ஆரபி, அட்டானா, பைரவி, பூபாளம், பிலஹரி, முஹாரி, சித்தரஞ்சனி, தன்யாசி, தேவ காந்தாரி, ஹம்சத்வனி, இந்தோளம், ஜமரஞ்சனி, காம்போதி, கானடா, காப்பி, கல்யாணி, கேதார்கௌலா, மோகனா, நீளாம்பரி, நடா, புன்னாகவராளி, ரஞ்சனி, சகானா, சங்கராபரணம், சிந்து பைரவி, தோடி, திருவாஹினி, தில்லானா, வசந்தா என பல உள்ளன.
Q17. கர்நாடக இசையில், ஒரு குறிப்பிட்ட ராகத்தைப் பாடுவதினால் மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது?
அம்ருதவர்ஷினி.
Q18. காலையில் பாடுவதற்கு உகந்த ராகம் எனக் கருதப்படுவது எது?
பைரவி.
Q19. இரவில் பாடுவதற்கு ஏற்ற ராகங்கள் யாவை எனக் கருதப்படுவது எது?
நீலாம்பரி மற்றும் கேதார்கௌலா.
Q20. கோவில்களில், தெய்வங்களை உறங்க அனுப்புவதற்கு, பாடப்படும் ராகம் எது?
பூபாளம்.
Q21. எந்த ராகத்தைப் பாடினால், நாகப்பாம்புகளை ஈர்க்கும் எனக் கருதப்படுகிறது?
புன்னாகவராளி.
Q22. கர்நாடக இசையில் ஒரு பாடலின் அங்கங்கள் யாவை?
கர்நாடக பாடல்களில் மூன்று அங்கங்கள் உண்டு. அவை கீர்த்தனை என்றழைக்கப் படுகிறது. இதில் உள்ள மூன்று அங்கங்கள்:
பல்லவி: ஓரிரண்டு வரிகள், சம்பந்தப்பட்ட ராகத்தை வார்த்தைகளில் பாடுவது.
அனுபல்லவி: இரண்டாம் பகுதி. பாடலின் அடுத்த பகுதி, இரண்டு மூன்று வரிகள்.
சரணம்: கடைசிப் பகுதி. இதில் சில சரணங்கள் அடங்கியிருக்கும்.
Q23. கர்நாடக இசையில் "வர்ணம்" என்பது என்ன?
எந்த ராகத்தில் ஒரு பாடலைப் பாடப் போகிறாரோ, அந்த ராகத்தை, வார்த்தைகள் இல்லாத நிலையில், பாடகரின் கற்பனைக்கேற்றவாறு, ராகத்தின் நிலைமாறாமல் வர்ணிப்பது.
Q24. தாளம் என்பது என்ன?
தாளம் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் ஒரு விதியாகும். கர்நாடக இசையின் முக்கிய அங்கமாகும்.
Q25. அடிப்படை தாளங்கள் எத்தனை?
(1) துருவ (2) மத்ய (3) ரூபக (4) ஜம்பா (5) த்ரிபுலா (6) அடா and (7) எக்கா. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்னும் பல ராகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
Q26. கர்நாடக இசையை பாடும் போது, பாடகரின் திறமை மற்றும் கற்பனை அடிப்படையில் மாறுதல்களை ஏற்படுத்துவார். அதன் அடிப்படை என்ன?
முதலில் இசை ஞானம். இரண்டாவது அனுபவம். இதற்கு, அடிப்படைப் பயிற்சி நல்ல முறையில் அமைந்திருக்க வேண்டும். இவை:
கல்பனா ஸ்வரம் -- தொடக்கத்தில் கற்றுக் கொடுக்கப்படுவது.
ராக ஆலாபனை -- ஒரு பாடலை பாடுவதற்கு முன், அந்த ராகத்தைப் பற்றிய ஒரு அலசல். பொதுவாக வார்த்தைகள் இல்லாமல், பாடகரின் பயிற்சிக்கேற்ற குரல் வளத்தில் பாடுவது:
நிரவல் -- இதை அனுபவமிக்க பாடகர்கள் மட்டுமே எடுத்து பாடுவர். ஒரு பாடலின் ஓரிரண்டு வரிகளை மட்டுமே, அவருடைய அனுபவம் மற்றும் ஞானத்திற்கேற்ப பல மாற்றங்களுடன் பாடுவது.
Q27. கர்நாடக இசையில் ராகம், தானம், பல்லவி என்பது என்ன?
இவ்வகை பாடல் என்பது, ராகம், தானம், நிரவல் ஆகியவற்றின் தொகுப்பு. இதில் நிரவல் முடித்து, பல்லவியை மீண்டும் எடுத்து, பாடும் வேக நிலையில் சில மாற்றங்களை மேற்கொண்டு பாடுவது.
Q28. கர்நாடக இசையில் பொதுவாக, பாடகருடன் இணைந்து இசையை பகிர்ந்து அளிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் யாவை?
பொதுவாக, ஒரு பாடகருடன், வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கடம் போன்ற உபகரணங்கள் பயன் படுத்தப்படுகிறது. நவீன காலத்தில், வீணை, மேண்டலின், சேக்ஸோஃபோன், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை மையமாக வைத்து, மேலே கூறப்பட்ட இசைக்கருவிகளுடன் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கர்நாடக இசையில் பாடகருடன் சேர்ந்து இசைக்கும் இசைக் கருவிகள் ""பக்க வாத்தியங்கள்"" எனப்படும்.
Q29. பாரத ரத்னா விருது பெற்ற ஒரே கர்நாடக இசைக்கலைஞர் யார்?
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி -- 16.9.1916 -- 11.12.2004 -- பாரத ரத்னா -- 1998.
Q30. கர்நாடகா இசையில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள் யாவை?
1. தம்பூரா -- ஒரு பெரிய அளவிலான கருவி. கீழ் பக்கம் ஒரு பானை வடிவமும், அதன் மேல் நீண்ட உயர வாக்கில், நான்கு கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கம்பிகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட வரிசையில் மீட்டி, சுதி நிலை நிறுத்தப்படும். இதில் மூன்று வகைகள் உண்டு. கம்பிகளின் இழுவை நிலையை நிலைப்படுத்த மேல் பகுதியில் உருளைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
(1) மீரஜ் -- பெயர் கொண்ட நகரில் தயாரிக்கப்படும் இந்த வகை, தென்னகத்தில் பயன் படுத்தப்படும் கருவியை விட சிறியதாக இருக்கும். ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகளில் பயன் படுத்தப்படுகிறது.
(2) தஞ்சாவூர் -- பெயர் கொண்ட தமிழக நகரில் தயாரிக்கப்படும் இந்த வகை, உருவத்தில் பெரியதாக இருக்கும். பொதுவாக தென் மாகாண கர்நாடக இசை நிகழ்ச்சியில் பயன் படுத்தப்படுகிறது. பலா மரம் முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது.
(3) தம்பூரி -- உருவத்தில் மற்றவைகளை விட சிறியதானது. இவ்வகை, பொதுவாக சரோத், சித்தார், ஷெனாய் போன்ற இசைக்கருவிகளுடன் பயன்படுத்தப்படுகிறது. நவீன காலத்தில் மின்னணு சுதிப்பெட்டிகள் பயனுக்கு வந்துள்ளன.
2. வயலின் -- பழமையானதொரு இசைக்கருவி. 14/15ம் நூற்றாண்டுகளிலேயே பயனில் இருந்ததாகத் தெரிகிறது. இது ஒரு ஐரோப்பிய கம்பி strings (steel) இசைக்கருவி. முழுவதும் மரத்தினால் செய்யப்பட்டு, 4 முதல் 6 கம்பிகள் வரை பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கம்பிகளிலிருந்து இசை சீராக வெளி வருவதற்காக, மேல் மற்றும் கீழ் பகுதிகளில் இரண்டு சிறு பாலங்கள் Bridge அமைக்கப்பட்டு, கம்பிகளின் இழுவை நிலையை சீர் செய்வதற்கு கீழ் பகுதியில் சிறிய அளவிலான உருளைகள் “pegs” பொருத்தப்பட்டிருக்கும். இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் வயலின் தயாரிப்பில் புகழ் பெற்றவை.
3. வீணை -- இந்த இசைக்கருவி இசை தெய்வமாக கருதப்படும் சரஸ்வதியின் கருவி ஆனதால், இதை ""சரஸ்வதி வீணை"" என்பர். இசைக்கருவிகளில் மிகப் பெரியது. இதுவும் ஒரு கம்பி இசைக் கருவி. இரண்டு பக்கங்களிலும் மரத்தில் ஆன குட வடிவ அமைப்பு, அதன் மீது நீண்ட மரத்தால் ஆன இணைப்புகளின் மீது கம்பிகள் பொருத்தப்பட்டு. அவை விரல்களால் மேலும் கீழுமாக ஒரு பக்கம் அடுத்தடுத்த கம்பிகள் மீட்டப்பட்டு, மற்றொரு கையால், கம்பிகளின் மீது அழுத்தம் கொடுத்து இசை ஒலி வெளி வரும். இதின் நான்கு கம்பிகள், 24 பாலங்கள் மீது பொருத்தப்பட்டிருக்கும். இந்த கம்பிகளின் இழுவை நிலையை நிலை நிறுத்த, கீழ் பகுதியில் உருளைகள் பொறுத்தப்பட்டிருக்கும். வீணையில் கீழ்க்கண்ட வகைகள் உண்டு:
(1) ருத்ர வீணை (2) சித்ரா (3) விசித்ர (4) சிந்த்ரா (கோட்டுவாத்யம்) (5) மோஹன வீணை என்ற வகைகள் உண்டு. மோஹன வீணையை, (கிட்டார் என்ற மேற்கத்திய இசைக்கருவியில் மாறுதல்கள் செய்து), பண்டிட் விஷ்வ மோஹன் பட் என்பவர் வடிவமைத்து, பிரபலப்படுத்தினார். இவற்றுள் ருத்ரா மற்றும் விசித்ர வீணைகள் இந்துஸ்தானி இசையிலும், சரஸ்வதி மற்றும் சித்ர வீணைகள் தென் இந்திய கர்நாடக இசையிலும் பயன்படுத்தப்படுகிறது. வீணை தயாரிப்பில் தஞ்சாவூர் முன்னணியில் உள்ளது.
4. மிருதங்கம் -- ஒரே பலா மரத்துண்டில் குடைந்து செய்யப்படும் தாளக் கருவி. இரு பக்கமும் வட்ட வடிவ ஆட்டுத் தோலினால் கவரப்பட்டு, மீண்டும் தோலினால் ஆன நாடாவால் இழுத்துக்கட்டப்பட்டிருக்கும். இந்த இழுவை நிலையை சீர் செய்ய இரண்டு தோல் நாடாக்களை இறுக்கத்தினை அதிகரித்து/ குறைத்து சீர் செய்வர். இதன் ஒரு பக்கம் பெரிய வட்டமாகவும், மறு பக்கம் சிறிய வட்டமாகவும் இருக்கும். தாள ராஜா என அழைக்கப்படுகிறது. இதன் பயிற்சியின் முதல் பாடம் த, தி, தும், நம். கர்நாடக இசையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாளக்கருவி.
5.கடம் -- தாள வாத்தியம் -- பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் களிமண் பானை. மடி மீது வைத்து இரு கைகளாலும் வாசிக்கப்படும் வாத்தியம்.
6.மோர்சிங் -- தென் இந்தியாவில் மட்டுமே பிரபலமான ஒரு தாள வாத்தியம். சுமார் 6 அங்குல நீளம் கொண்ட, இரும்பினால் ஆன (குதிரை லாட வடிவ முனை) வட்டவடிவ கருவியில், இரண்டு இரும்பு மெல்லிய கம்பிகள் மீட்டும்படியாக பொருத்தப்பட்டிருக்கும். இந்த கருவியை பற்களுக்கிடையில் வைத்து, அந்த கம்பிகளை மீட்டுவதினால் ஏற்படும் இசை வடிவத்தில் தாளத்திற்கேற்ப நாக்கு அசைவு, மற்றும் காற்று இழுத்து வெளி விடும் முறையில் வெளி வரும் அதிர்வுகளே இசை வடிவமாக வெளிவரும். மிகவும் கடினமான ஒரு கருவி. அனுபவம் மிகவும் தேவை.
7.கஞ்சிரா -- பலா மரத்தால் ஆன, ஒரு சிறிய வட்ட வடிவ உருளையின் ஒரு பக்கம் மட்டும் உடும்பு தோலால் கவரப்பட்டு, நன்றாக இழுத்து ஒட்டப்பட்டிருக்கும். ஒரு கையில் பிடித்துக்கொண்டு, ஒரு கையால் வாசிக்கப்படும் தாளக் கருவி. 8. நாதஸ்வரம் -- சுமார் 3 -- 4 அடி நீள நீண்ட குழலின் முனையில் கூம்பு வடிவம் கொண்டு, ஆச்சா என்ற மரத்தினால் ஆன ஒரு ஊது குழல் இசைக்கருவி. கூரி முனை ஊதுவதற்கு பயன்படுத்தப்பட்டு, கூம்பு வடிவத்தின் மூலம் இசை ஒலி வெளிவரும். நீள் வட்ட மெல்லிய குழல் பகுதியில், பல ஓட்டைகள் இருக்கும். இந்த ஓட்டைகளின் மீது விரல்களால் மூடி திறந்து, வெளிவரும் காற்றினை இசை வடிவமாக மாற்றிக் கொடுப்பர். இந்த இசைக்கருவி, திருமணம், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் அதிகமாக பயன் படுத்தப்படுகிறது. இக்கருவியால், தனி இசை நிகழ்ச்சி மிகவும் அரிதாக நடைபெறுவதுண்டு. இந்த கருவிக்கு உகந்த தாள வாத்தியம் தவில்.
9. தவில் -- சற்றே பெரிய உருளை வடிவ, ஒரே மரத்துண்டால் (பலா) ஆன தாள வாத்தியம். அமர்ந்து மடியில் வைத்து, அல்லது தோளில் தொங்கவிட்டு, ஒரு பக்கம் கையாலும், மறு பக்கம் ஒரு கொம்பாலும் வாசிக்கப்படும். நாதஸ்வரத்தின் நிரந்தர துணை வாத்தியம். நாதஸ்வரம் மற்றும் தவில் சேர்ந்து, அதிகமான ஓசை எழுப்பும் இசைக்கருவிகள்.
10. புல்லாங்குழல் -- பொதுவாக, மூங்கிலால் ஆன ஒரு ஊது குழல் வாத்தியம். சிறிய உருளை வடிவத்தில், சுமார் 1 முதல் 2 அடி நீளத்தில், (திறமைக்கேற்ப மாறக்கூடியது) குழல் பகுதியில் பல ஓட்டைகள் கொண்டு, மிக பிரபலாமாக பயன்படுத்தப்படும் ஒரு ஊது ஓசைக்கருவி. ஒரு மெல்லிய மென்மையான ஓசையை எழுப்பும் இனிமையான இசைக்கருவி.
Q31. இந்துஸ்தானி இசை என்பது என்ன?
கர்நாடக இசையிலிருந்து பிறந்த ஒரு இசை வகை எனக் கூறலாம். வடஇந்தியாவில் அதிகமாக பழக்கத்திலிருக்கும் பாரம்பரிய இசை. இந்த இசை வகையில், பாரசீக இசையின் தாக்கம் இருப்பதற்கு காரணம், இந்த இசைக்கு இஸ்லாமிய மன்னர்கள் அதிக ஆதரவு தெரிவித்ததே காரணம். 13/14ம் நூற்றாண்டுகளிலிருந்து புகழ் பெறத் தொடங்கிய இந்த இசையை, சீரான முறையில் பயிற்சி பெறுவதற்கு, பாபர் அரசவையில் இருந்த அமீர் குஸ்ரூ சரியான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். இந்த இசை வடிவமும் ராகம் மற்றும் தாளத்தை அடிப்படையாகக் கொண்டது. பல ராகங்கள், கர்நாடக இசையிலிருந்து பெறப்பட்டு, பல மாற்றங்களுடன் இசைக்கப்படுகின்றன. பொதுவாக வாய்ப்பாட்டும், சரோத், ஷெனாய், புல்லாங்குழல், சாரங்கி போன்ற இசைக் கருவிகளாலும் இசைக்கப்படுகிறது. இந்த இசையின் வல்லுநர்கள் ""பண்டிட்/உஸ்தாத்"" என்ற சிறப்பு பட்டத்தால் அழைக்கப்படுகின்றனர்.
Q32. இந்துஸ்தானி இசையின் வகைகள் யாவை?
(1) த்ருபத் -- Dhrupad: இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு, பாரம்பரிய முறையில் தம்பூரா, தப்லா போன்ற இசைக்கருவிகளைக் கொண்டு இசைக்கப்படுகிறது.
(2) காயல் -- Khayal: வாய்ப்பாட்டு -- முன்னேற்பாடின்றி, அந்த சமயத்திலேயே, பல மாற்றங்களை உணர்ச்சி பூர்வமாக புகுத்தி பாடுவது.
(3) தரானா -- Tarana: வாய்ப்பாட்டு -- ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியின் கடைசியில், கர்நாடக இசையின் தில்லானா போன்று, இசைக்கப்படுவது.
(4) தும்ரி -- Tumri: வாய்ப்பாட்டு -- பாரம்பரியமும் இதர இசை வகைகளையும் கலந்து பாடுவது. -- பொதுவாக காதலை மையமாகக் கொண்டது.
(5) பஜன் -- Bhajan: இந்து மத ஆன்மீக பாடல்கள் -- வாய்ப்பாட்டு.
(6) கஸல் -- Ghazal: இது ஒரு வகை பாரசீக இசையின் கவிதை வடிவப் பாடல்கள். பாரம்பரிய இசையையும் இதர இசையையும் கலந்து, உணர்ச்சி பூர்வமாக மெல்லிசை பாணியில், காதல், சமூக பிரச்சனைகள் முன் வைத்து பாடப்படுபவை. மக்களிடையே அதிக வரவேற்பு உள்ள ஒரு இசை வகை.
(7) கவாலி -- Qawwali: இஸ்லாமியர்களின் ""சுஃபி"" எனப்படும் கடவுள் நம்பிக்கை அடிப்படையாகக் கொண்டு இந்துஸ்தானி இசையின் அடிப்படையில் இசைக்கப்படும் பாடல்கள். மக்களிடையே அதிக வரவேற்பு உடைய ஒரு இசை வகை. சமூக மற்றும் காதலை மையமாகக் கொண்டும் இரண்டு முன்னணி பாடகர்களையும், சில துணைப்பாடகர்களையும், ஹார்மோனியம, தபலா, தோலக், போன்ற இசைக்கருவிகளை கொண்டு இசைக்கப்படுவது.
Q33. இந்துஸ்தானி இசையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் யாவை?
1. ஆர்மோனியம் -- HARMONIUM: 1842ல் ஃப்ரான்ஸ் அலெக்ஸாண்டர் டிபெய்ன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பெட்டியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள விரல் நீள கட்டைகளை அழுத்தி இசையை எழுப்புவார்கள். எந்த வரிசையில் அழுத்த வேண்டும் என்பது, பயிற்சி மற்றும் அனுபவ ரீதியாக பயில வேண்டிய ஒன்று. இந்துஸ்தானி இசையில் மிக முக்கிய கருவி.
2. தபலா -- TABLA: மிகப் புகழ்பெற்ற தாள வாத்தியம். இந்துஸ்தானி மற்றும் இதர இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் ஒரு முக்கிய இசைக்கருவி. ஒரு மிருதங்கத்தின் இரு அரை பகுதிகள் போன்று தனித்தனியாக இருக்கும்.
3. ஷெனாய் -- SHEHNAI: இது ஒரு ஊது குழல் இசைக்கருவி. நாதஸ்வரம் போலிருக்கும் ஆனால் உருத்திலும், எழுப்பும் ஓசையிலும் சிறிய அளவிலானது. இந்துஸ்தானி பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளில் அதிகமாக பயன்படும் இசைக்கருவி. மூச்சு அளவில் வெளிப்படும் ஓசையை இசையாக அளிக்கும் கருவி. வட இந்தியாவில் அதிகமாக பயன் படுத்தப்படும் கருவி. இந்த இசைக்கருவியின் மிகப்பெரிய மேதையாக கருதப் பட்டவர் மறைந்த உஸ்தாத் பிஸ்மில்லா கான், பாரத ரத்னா விருது பெற்றவர்.
4. சரோத் -- SAROD : இது ஒரு கம்பி இசைக் கருவி. இதில் சுமார் 25 கம்பிகள் கட்டப் பட்டிருந்தாலும், மேல் பக்க 4 கம்பிகளே முக்கியமாக பயன் படுத்தப்படும். இதர கம்பிகள் ரிதம் எனப்படும் ஒலிநயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. தேக்கு அல்லது மஹோகனி என்ற மரத்தின் ஒரே துண்டினால் செய்யப்படுகிறது. கம்பிகளை மீட்டுவதற்கு முக்கோண வடிவ விரலுக்கு அடக்கமான மீட்டு கருவி பயன்படுத்தப்படுகிறது.
5. சித்தார் -- SITAR : மிகப் பழமையான கம்பி இசைக்கருவி. வெளி நாடுகளிலும் பிரபலமானது. பொதுவாக, இதில் 18 லிருந்து 20 கம்பிகள் இருக்கும். அவற்றுள் 6 அல்லது 7 கம்பிகளே இசைக்கப் பயன்படுத்தப்படும். மீதி கம்பிகள் கூடுதல் ஒலிநயத்துக்காக பயன்படுத்தப்படும். கம்பிகள், உலோகத்தால் ஆன ஒரு மீட்டி யின் (மெஸ்ராப் எனப்படும்) உதவியால் மீட்டப்படுகிறது. பண்டிட் ரவிசங்கர் மற்றும் அவருடைய மகள் அனுஷ்கா இந்த இசைக்கருவியில் மிகவும் பிரபலமானவர்.
6. சாரங்கி -- SAARANGI : இதுவும் ஒரு கம்பி இசைக்கருவி. ஒரே மரத்துண்டினால் செய்யப்படுகிறது. பெட்டி போன்ற அமைப்பில், 2 அடி நீளம், 6 அங்குல அகலம் கொண்டு சுமார் 40 கம்பிகள் பொருத்தப்பட்ட ஒரு கருவி. அதன் மேல் ஒரு bows - அம்பு - எனப்படும் மரத்தால் ஆன நீண்ட, குதிரைமுடி நீள் வாக்கில் கட்டப்பட்ட, ஒரு இசைக்கருவியின் மூலம் வாசிக்கப் படும். (வயலினைப் போன்று) . இது அதிக பிரபலமில்லாத ஒரு வட இந்திய இசைக் கருவி.
Q34. பாரம்பரிய கர்நாடக இசையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
புரந்தர தாசர் (1480-1564): கர்நாடக இசையில் கன்னட மொழியில் அதிகமான பாடல்களைத் தொகுத்தவர். அவற்றுள் பல அழிந்து விட்டன. ""மாய மௌல கௌலா"" என்ற, பயிற்சியின் முதல் ராகத்தை தொகுத்து அறிமுகப்படுத்தியவர் இவரே.
Q35. கர்நாடக இசையின் ""த்ரிமூர்த்திகள்"" (மும்மூர்த்திகள்) எனப்படுபவர்கள் யாவர்?
(1) தியாகராஜர் -- THYAGARAJA (1759-1847): தமிழ் நாட்டின் திருவாரூரில் பிறந்தவர். இயற்பெயர் -- காகர்லா த்யாகபிரம்மம். கர்நாடக இசையின் ""பிதாமகன் என அழைக்கப்படுபவர். இவர் 1000 பாடல்களுக்கு மேல் தொகுத்துள்ளார். ""பஞ்சரத்ன கீர்த்தனை"" எனப்படும் சிறப்பான 5 தொகுப்புகள், தியாகராஜரை போற்றி நடத்தப்படும் அனைத்து விழாக்களிலும், குறிப்பாக திருவையாறில் நடத்தப்படும் அவருடைய ஆராதனை விழாவில், நூற்றுக்கணக்கான பாடகர்கள் ஒன்றாகப் பாடுவது மிகப்பெரிய நிகழ்ச்சி.
(2) ஷ்யாமா சாஸ்திரி -- SHYAMA SASTRI (1762-1827): கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் மூத்தவர். இவரும் 300க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை தொகுத்துள்ளார். ஆனால் ஒரு சிலவே இன்று புழக்கத்தில் உள்ளன.
(3) முத்துசாமி தீட்சிதர் -- MUTHUSWAMY DIKSHITHAR: (1776-1867). தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்தவர். இவர் சுமார் 500க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை தொகுத்துள்ளார். அவை இன்றும் பல நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு/இசைக்கப்பட்டு வருகினறன.
Q36. கர்நாடக இசை நிகழ்ச்சிகளில், அதிகமாக பாடப்பட்டு வரும் பாடல்களை தொகுத்தளித்த இதர பிரபலமான தொகுப்பாளிகள் யாவர்?
வியாசதீர்த்தா, கனகதாசர், கோபாலதாசா, முத்துத் தாண்டவர், அருணாச்சல கவி, மாரிமுத்துப்பிள்ளை, அன்னமாச்சார்யா, வெங்கடகவி, ஸ்வாதி திருநாள் (கேரள மன்னர்) நாராயண தீர்த்தர், பட்டினம் சுப்ரமணிய அய்யர், பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார், மைசூர் வசுதேவச்சார்யார், முத்தையா பாகவதர், கோடீஸ்வர ஐயர், கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன், சுப்ரமணிய பாரதி மற்றும் பலர். இவருடைய கீர்த்தனை தொகுப்புகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் உள்ளன.
Q37. கர்நாடக இசையில் எத்தனை மேலகர்த்தா ராகங்கள் உள்ளன?
72
Q38. கர்நாடக இசையின் மேலகர்த்தா ராகங்களின் முதலாவதும், கடைசியானதும் எனக் கூறப்படுவது எது?
பொதுவாக பாரம்பரிய முறையில், "கனகாங்கி" மற்றும் "ரசிகப்ரியா"
Q39. கர்நாடக இசையில் "த்விமுத்ரகரா" “Dvimudrakara” என்பது என்ன?
ஒரு கர்நாடக இசை தொகுப்பாளர், தனது தொகுப்பில் இரண்டு வகை முத்திரைகள் (முத்ரா) பயன்படுத்தியிருக்கிறார் என குறிப்பிடுகிறது.
Q40. புகழ் பெற்ற கர்நாடக/திரைப்படத் துறை பாடகர், யேசுதாஸ் அவர்களின் இசை நிறுவனத்தின் பெயர் என்ன?
தரங்கிணி.
Q41. MP3 என்ற இசைவடிவ, வடிவபதிப்பை பதிவு செய்தவர் யார்?
Fraun Hoefer Gesellschaft – ஜெர்மனி.
Q42. பாப் எனப்படும் இசைவகைகயின் முதல் காணொளியைப் pop-video வடிவப்பதிவு செய்த இசைக்குழு எது?
Bohemian Rhapsody by Queen in 1975.
Q43. மகாத்மா காந்தியை கௌரவிக்கும் வகையில் பண்டிட் ரவிசங்கர் ஒரு ராகத்தைத் தொகுத்தார்? அதன் பெயர் என்ன?
மோகன்கௌன்ஸ் -- Mohankauns.
Q44. உலகில் அதிகமாக விற்கப்படும் இசைக்கருவி எது?
ஹார்மோனிகா --Harmonica.
Q45. சமுத்ர குப்தர், அவுரங்கசீப் மற்றும் ராவணன் ஆகியோர் எந்த இசைக் கருவி வாசிப்பதில் வல்லவர்களாக இருந்தனர்?
வீணை. Veena.
Q46. சிறிய வகையிலான கம்பி இசைக்கருவிகளை, விரல்களில் பிடித்து, மீட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மிகச்சிறிய கருவியின் பெயர் என்ன?
Plectrum அல்லது Pick.
Q47. பியானோ என்ற மேற்கத்திய இசைக்கருவியில் எத்தனை சாவிகள் keys உள்ளன?
88 -- 52 வெள்ளை, 36 கருப்பு.
Q48. அயர்லாந்து நாட்டின் Paul David Hewsen (Bono) என்பவரின் இசை உலக மற்றும் வேறு சாதனை என்ன?
இவருடைய இசைக்குழுவின் பெயர் UZ. ஆஸ்கார், கோல்டன் க்ளோப் Golden Globe, க்ராமி Grammy போன்ற இசை விருதுகளுக்கும், நோபல் அமைதிப்பரிசுக்கும் இவரது பெயர் தாக்கல் செய்யப்பட்டது. இவர் 22 க்ராமி Grammy விருதுகளைப் பெற்றவர்.
Q49. இந்தியாவின் புகழ் பெற்ற நடனங்கள் யாவை?
1. பரத நாட்டியம் – தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளாவின் சில பகுதிகள்.
2. குச்சிப்புடி -- ஆந்திரப்பிரதேசம்.
3. கதக்களி -- கேரளா.
4. மோகினி ஆட்டம் -- கேரளா.
5. ஒடிஸ்ஸி -- ஒடிசா
6. மணிப்பூரி -- மணிப்பூர்
7. கர்பா -- குஜராத்
8. தாண்டியா -- குஜராத்.
9. யக்ஷகானம் -- வட கர்நாடகா.
Q50. எந்த புராண காலத்து நூல், இசை மற்றும் செய்முறைக் கலைகளின் ஆதார நூலாக கருதப்படுகிறது?
பரத முனிவரின் "நாட்டிய சாஸ்திரம்".
Q51. பரத நாட்டியம் முன் காலத்தில் யாரால் ஆடப்பட்டு வந்தது?
இந்து மத கோவில்களின் ""தேவதாசி"" நடனக் கலைஞர்களால் ஆடப்பட்டது. அதனால் தான் இந்த நாட்டியத்தை ""தேசியாட்டம்"" எனவும் கூறுவர்.
Q52. பாரம்பரிய கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியக் கலையின் மையமாக கருதப்படும் இடம் எது?
தஞ்சாவூர், தமிழ்நாடு.
Q53. தஞ்சாவூரை ஆண்ட எந்த மன்னர், பரத நாட்டியத்திற்கு பெரும் ஆதரவு அளித்தார்?
சரபோஜி மன்னர் (1798-1824).
Q54. சரபோஜி மன்னர் அவையில் இருந்த யாவர், பரத நாட்டிய கலையை சீரான முறையை பயில வழி வகைகளை வகுத்துக் கொடுத்தவர்கள் யாவர்?
சின்னைய்யா, பொன்னையா, சிவானந்தன் மற்றும் வடிவேலு. இவர்கள் தான் பரத நாட்டியம் பயிலும் முறையின் அலரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், தில்லானா மற்றும் சில முறைகளை வழி வகுத்துக் கொடுத்தனர். இந்த வம்சாவளியில் வந்து, இந்த நாட்டிய முறையை பயில்விப்பவர்கள் ""நட்டுவனார்கள்"" என்றும், பர்த நாட்டியம் கற்பிக்கும் முறையை ""நட்டுவாங்கம்"" எனவும் அழைப்பார்கள்.
Q55. பரத நாட்டியத்தின் மூன்று முக்கிய அம்சங்கள் யாவை?
நிருத்தா Nritta – தாளத்திற்கேற்ப உடல் அசைவுகள் நாட்யா -- முகத்திலும் கைகளாலும் பாடலின் பாவனைகளை உணர்த்துவது. நிருத்யா -- மேற்கூறிய இரண்டும் கலந்த தொகுப்பு.
Q56. பரத நாட்டியத்தின் பல தொடர்களும் விளக்கங்களும்:
ம்ரிதுங்கஹரா -- Mridungahara – கை, கால்களின் அசைவு
ரஸா -- Rasas – உணர்வுகளை வெளிப்படுத்துதல்
பாவம் -- Bhavas – உணர்வுகள் வெளிக்காட்டுதல்
க்ரியாஸ் -- Kriyas – நடிப்பு
அபிநயா -- Abhinaya – செயல் முறைகளின் மூலம் கதையை வெளிப்படுத்துவது
கணபதி வந்தனா -- Ganapathi Vandhana: விநாயகர் பிரார்த்தனை -- நிகழ்ச்சியின் முதல் செயல்.
அலரிப்பு -- Alarippu – தாளத்தை வெளிப்படுத்தி, கடவுள்களின் அருள் வேண்டுவது.
ஜதீஸ்வரம் -- Jatiswaram – கால்களின் அசைவில் நயம் வெளிப்படுத்துவது.
ஷப்தம் -- Shabdam: பாடல்களுக்கு நாட்டியம் ஆடுவது. பொதுவாக ஆன்மீக பாடல்கள்.
வர்ணம் -- Varnam: பரத நாட்டிய நிகழ்ச்சியின் நீண்ட நடன நேரம். கை, கால், முகம் அசைவுகளின் மூலம், காதலை வெளிப்படுத்துவது.
பதம் -- Padam: பாடல் வரிகளை, உதடுகளின் அசைவுகளின் மூலம் மட்டுமே, எல்லா உணர்வுகளையும் -- அன்பு, பாசம், கோபம், ஆச்சரியம் -- வெளிப்படுத்துதல்.
தில்லானா -- Thillana: இந்த பகுதியில் நடனம் ஆடுபவர் தனது திறமைகளை, நளினமான கால் அசைவுகள் மற்றும் நடிப்புத் திறமையைக் காட்டுதல்.
Q57. நாட்டிய சாஸ்திரத்தைத் தவிர்த்து வேறு எந்த நூல், பரத நாட்டியத்திற்கு ஒரு வழிகாட்டி நூலாக பயனில் உள்ளது?
அபிநய தர்ப்பனம்-- Abhinaya Dharpanam -- கை, கால், முகம் என உடல் ரீதியான அசைவுகள் மற்றும் நிலைகளை விளக்கும் நூல். எழுதியவர் நந்திகேஷ்வரா.
Q58. எந்த இந்துக்கடவுள் பிரபஞ்சத்தின் முதல் நாட்டிய கலைஞர் என கருதப் படுகிறார்?
சிவ பெருமான் -- சிதம்பரத்தில் "நடராஜர்" என்ற நிலையில்.
Q59. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபெருமான் நடத்தும் நடனத்தின் பெயர் என்ன?
""ஆனந்த தாண்டவம்"". “Anandha Thandavam” – இந்த நாட்டியத்தின் மூலம் அவர் ""பிரபஞ்சத்தின் நாட்டியக் கலைஞர்"" “Cosmic Dancer” எனப்படுகிறார். இந்த நாட்டியத்தின் மூலம், உலகின் இயக்கத்தின் ஐந்து நிலைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது (1) க்ரியா -- உருவாக்குதல்; (2) ஸ்திதி -- பராமரித்தல்; (3) சம்ஹாரா -- அழித்தல்; (4) திரோபவா -- மறைத்து வைத்தல்; (5) அனுக்ரஹா -- அருளளித்தல்.
Q60. பரத நாட்டிய கலையை வளர்ப்பதற்காக சென்னையில் நிறுவப்பட்ட புகழ் பெற்ற அமைப்பு யாது? அதை யார் நிறுவினார்?
கலாக்ஷேத்ரா -- Kalakshetra – 1936 -- ருக்மணி தேவி அருண்டேல்.
Q61. நல்ல பரத நாட்டிய கலைஞராவதற்கு ஒருவருக்குத் தேவையான முக்கிய அம்சங்கள் யாவை?
(1) ஜாவஹா -- Javaha – சுறுசுறுப்பு
(2) ஸ்திரத்வம் -- Sthirathvam – ஸ்திரத்தன்மை
(3) ரேகாச்சா -- Rekhacha – நளினம்
(4) ப்ரமாரி -- Bramari – சமநிலை
(5) த்ரிஷ்டிர் -- Dhrishtir – பார்வை
(6) ஷ்ரமஹா -- Shramaha – கடின உழைப்பு
(7) மேதா -- Medha – அறிவுக்கூர்மை
(8) ஷ்ரத்தா -- Shraddha – பக்தி
(9) வாச்சோ -- Vacho – பேச்சுத் திறமை
(10) கீதம் -- Geetam – பாடும் திறமை/ஞானம்.
Q62. பாரம்பரிய நாட்டியக் கலையின் "நவரசம்" எனக் கருதப்படுவது யாவை?
(1) ஷ்ரிங்கார் -- Shringar – காதல் வெளிப்பாடு
(2) ஹாஸ்யா -- Hasya – நகைச்சுவை
(3) கருணா -- Karuna – பரிதாபம், கருணை
(4) ருதரா -- Rudra – கோபம்
(5) வீர் -- Vir – வீரம்
(6) பயானக் -- Bhayanak – பயம்
(7) அத்புத் -- Adbhut – அதிசயம்/ஆச்சரியம்
(8) ஷாந்தாம் -- Shanta – சாந்தம், அமைதி
(9) விபத் -- Vibhat – வெறுப்பு.
Q63. பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற கலைஞர்கள் யாவர்?
ருக்மணி தேவி அருண்டேல், பால சரஸ்வதி, பத்மா சுப்ரமணியம், சித்ரா விஸ்வேஸ்வரன், வைஜயந்திமாலா, ஹேமா மாலினி.
Q64. ஆந்திர பிரதேசத்தின் புகழ்பெற்ற பாரம்பரிய நாட்டியக் கலை எது?
குச்சிப்புடி -- இதே பெயர் கொண்ட கிராமத்திலிருந்து தொடங்கியது. (கிருஷ்ணா மாவட்டம்)
Q65. குச்சிப்புடி நடனத்தை நெறிமுறைப்படுத்தியவர் யார்?
சித்தேந்த்ர யோகி -- 14 வது நூற்றாண்டில்.
Q66. குச்சிப்புடி நடனத்தில் புகழ் பெற்ற கலைஞர்கள் யாவர்?
டாக்டர் வேம்பட்டி சின்ன சத்யம், வேதாந்தம் லக்ஷ்மிநாராயணா, உமா ராம ராவ், தாடெபள்ளி பேரய்யா, சிந்தா கிருஷ்ணமூர்த்தி, மிருளாணி சதநந்தா, ஷோபா நாயுடு, பசுமதி வேணுகோபால சர்மா, ராஜா மற்றும் ராதா ரெட்டி, அனுராதா நேரு, சரளகுமாரி கண்ட்டா ஆகியோர். ஜப்பான் நாட்டின் கெய்கோ வத்தனபே என்பவரும் புகழ்பெற்ற கலைஞர்.
Q67. கேரள மாநிலத்தின் புகழ் பெற்ற நடனக்கலை எது?
கதகளி -- "காளி விளக்கு" எனப்படும் எண்ணெய் விளக்கு முன்பாக ஆடப்படும் நடனம்.
Q68. கதகளி என்பதன் பொருள் என்ன? இந்த நடனம் எவ்வாறு ஆடப்படுகிறது?
கதா = கதை; களி = விளையாட்டு, நடனம், நடிப்பு. இந்த நடனக் கலைஞர்கள், தங்கள் முகங்களை பல வண்ணங்களில் அலங்கரித்துக் கொண்டு, பல கண்ணைக் கவரும் வண்ண ஆடைகளும் இதர அணிகலன்கள், அலங்காரங்கள் என உடல் முழுவதும் அலங்காரம் கொண்டு, கை அசைவு (முத்ரா), முக பாவனை (லஸ்யா) மூலம், பொதுவாக கர்நாடக இசைக்கு, ""கதகளி பாடம்"" என்ற வரிகளுக்கு/பாடல்களுக்கு நடனம் ஆடுவதே இந்தக் கலை. இந்த நடனத்தை ஆடுவதற்கு, உடல் சக்தி, சகிப்புத் தன்மை, கவனம் ஆகியவை மிக அவசியம். இந்த கலை பயின்று, நிகழ்ச்சிகள் நடத்தும் நிலை அடைய குறைந்த பட்சம் 8-10 வருடங்கள் ஆகும். இந்த நடனத்திலும் நவரச பாவங்கள் மிகவும் பயன் படும். அதிகமாக ஆண்களால் மட்டுமே ஆடப்படும் நடனம்.
Q69. கதகளி நடனத்தின் ஐந்து முக்கிய அம்சங்கள் யாவை?
(1) சாகித்யம் Sahityam – இலக்கியம்
(2) சங்கீதம் -- Sangeetham – இசை
(3) சுட்டி -- Chutti – அலங்காரம்
(4) நாட்டியம் -- Natyam – நடனம்
(5) ந்ரிதம் -- Nritham – ஆடும் செயல் முறை.
Q70. கேரளாவில் பாரம்பரிய நடனங்களை முறையாக பயில்விக்கும் நடனக் கல்வி மையம் எது?
கேரள கலா மண்டலம் -- 1930 -- வள்ளத்தோல் நாராயண மேனன் என்பவரால், செந்துருத்தி, திருச்சூர் மாவட்டத்தில் நிறுவப்பட்ட, குருகுல முறையில் பயில்விக்கும் ஒரு மையம்.
Q71. புகழ்பெற்ற கதகளி நாட்டியக் கலைஞர்கள் யாவர்?
1. குரு குஞ்சு குருப் 2. சென்னித்தலா கொச்சு பிள்ளை பணிக்கர் 3. கோட்டக்கல் சிவராமன் 4. கலாமண்டலம் கோபி.
Q72. கேரளாவின் மற்றொரு புகழ்பெற்ற நடனம் மோகினி ஆட்டம் என்பது என்ன?
கேரளாவின், பரத நாட்டியமும் கதகளியும் கலந்த ஒரு பாரம்பரிய நடனம். இதை பொதுவாக பெண்கள் மட்டுமே ஆடுவார்கள். தங்க சரிகை ஓரங்கள் கொண்ட வெள்ளை நிற புடவைகள் (கசவு எனப்படும்) அணிந்து ஆடப்படும் நடனம். நளினம் மிகுந்த உடல் அசைவுகளை (சுமார் 40 அசைவுகள், அடாவுக்கள் எனப்படுவது) காண்பித்து ஆடப்படும் நடனம். இந்த நடனங்கள், பொதுவாக, கடவுள் பக்தி, காதல், பொதுவாக கிருஷ்ணர் மற்றும் விஷ்ணு பகவான் மீது ஆடப்படும் நடனம். இந்த நடனத்தை வழிநடத்தும் நூல் -- ""ஹஸ்த லக்ஷணா தீபிகா"" மற்றும் இதன் வசனங்கள்/பாடல்கள் ""மணிப்ரவ்லா"" எனவும் அழைக்கப்படும். இதன் வரிகள் சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்தில் எழுதப்படும்.
Q73. கேரளாவின் இதர நடனங்கள் யாவை?
1. கூடியாட்டம் -- KOODIYATTAM: கேரளாவின் மற்றொரு பாரம்பரிய நடனம். யுனெஸ்கோவால்அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய செயற்கலை நடனம். சமஸ்கிருத நடன நாடகம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த நடனக்கலையை குலசேகர வர்மா சேரன் பெருமாள் என்ற பழங்கால மன்னர் இந்த கலையைத் தொடங்கி வைத்தத்தாகவும், இதன் வழி முறைகளை ""ஆட்டப்ரகாரம்"" என்ற அவருடைய நூலில் கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில், ஆண் வேடங்களை பொதுவாக் ""சக்யார்"" என்ற இன ஆண்களும், பெண் வேடங்களை ""அம்பலவாசி நம்பியார்"" என்ற இன பெண்களும், பங்கு பெறுவதே வழக்கமாக உள்ளது. இதன் பக்கவாத்தியமாக ""மிழவு"" என்ற தாள வாத்தியம், நம்பியார்களால் வாசிக்கப்படும் வழக்கமாக உள்ளது. இதை ""கூத்து"", மற்றும் ""சக்யா கூத்து"" எனவும் அழைப்பர். மறைந்த மணி மாதவ சக்யார் என்பவர் இந்த ஆட்டத்தில் புகழ்பெற்ற கலைஞர்.
2. துள்ளல் -- THULLAL: ""ஓட்டம் துள்ளல்"" ""ஏழைகளின் கதகளி"" எனவும் அழைக்கப் படுகிறது. குஞ்சன் நம்பியார் என்ற கவிஞரால் உருவாக்கப்பட்ட இந்த நடன கலை, சக்யார் கூத்துக்கு மாற்றாக உருவானது. தனி ஒரு கலைஞரால், வண்ண ஆடை அலங்காரத்துடன், இதற்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக பாடல்களுடன் நடித்து ஆடும் ஆட்டம்.
3. பஞ்சவாத்யம் -- PANCHAVAADYAM: கேரளாவின் எந்த நிகழ்ச்சியானாலும் இந்த வாத்யம் இல்லாமல் நடைபெறாது. அவ்வளவு முக்கியமான ஒரு செயற்கலை. இதில் தாளம் மற்றும் ஊது வாத்தியங்கள் சேர்த்து ஐந்து பங்கு பெறும். அவை:
(1) திமிலா -- TIMILA: இரண்டு கைகளாலும் வாசிக்கப்படும் தாள வாத்தியம். ஐந்து வாத்தியங்களுள் முக்கியமானது, காரணம் இந்த வாத்தியத்தாலேயே எந்த நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு, முடிக்கப்படுகிறது.
(2) சுதா மாதளம் -- SUDHAMAADHALAM: ஒரே பக்கத்தில் இரு கைகளாலும் வாசிக்கப்படும் தாள வாத்தியம்.
(3) கொம்பு -- KOMBU: ஒரு ஊது ஓசை இசைக்கருவி. கேரளாவில் மட்டுமே காணப்படும் ஒரு இசைக்கருவி.
(4) எடக்கா -- EDAKKA: காலமானி (மணல்) போன்ற வடிவத்தில் ஒரு சிறிய குச்சியின் உதவியால் வாசிக்கப்படும் தாள வாத்தியம்.
(5) எலத்தாளம் -- ELATHALAM: பித்தளையால் ஆன இரண்டு வட்ட வடிவ தட்டு போன்ற உலோக துண்டுகளை தாளத்திற்கேற்ப தட்டி மணி அடிக்கும் சத்தத்தை உருவாக்கும் இசைக்கருவி.
4. பாண்டி மேளம் -- PANDI MELAM : கேரளாவை மட்டுமே சார்ந்த தாள வாத்யம். பாரம்பரிய இசைக்கருவி. இது கோவில்களில் இசைக்கப்படுவதில்லை.
5. பஞ்சரிமேளம் -- PANCHARIMELAM: பாண்டி மேளம் போன்றது. கோவில்களில் குழல், எலத்தாளம், கொம்பு போன்ற இசைக் கருவிகளுடன் சண்டமேளம் என்ற தாள குழுவாக இசைக்கப்படுவது.
6. தாயம்பகா -- THAYAMBHAKA: கேரளாவில் மட்டுமே உபயோகிக்கப்படும் இசை கருவி. தமிழ் நாட்டின் தவில் போன்ற அமைப்பு கொண்ட தாள வாத்தியத்தை, இடுப்பில் தொங்கவிட்டு கை மற்றும் ஒரு குச்சியுடன் வாசிக்கக்கூடியது. பொதுவாக சண்டமேள இசைக்குழுவில் காணப்படும் தாளக்கருவி.
Q74. கர்நாடகாவின் புகழ் பெற்ற பாரம்பரிய (பரத நாட்டியம் தவிர்த்து) செயற்கலை எது?
யக்ஷகானம் -- YAKSHAGANA: கர்நாடகாவின், உத்தரகன்னடா, ஷிமோகா, உடுப்பி, தக்ஷிண கன்னடா, மற்றும் காசரகோடு (கேரளா) போன்ற பகுதிகளில் பிரபலமானது. இந்தக் கலை பொதுவாக புராண கதைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆண், பெண் இருவரும் வண்ண ஆடைகள், அலங்காரத்துடன் கலந்து கொண்டு நடத்தும் கலை. பின் இரவு நேரங்களில் நடைபெறும். உடுப்பியில் உள்ள யக்ஷகான கலாகேந்திரா இந்த கலையை முறையாக பயிற்சி அளிக்கிறது.
Q75. ஒடிசாவின் புகழ் பெற்ற நடனம் யாது?
ஒடிஸ்ஸி -- ODISSI: மிகப் பழமையான நாட்டியக்கலை. நளினம், உடல் அசைவு, சிலை போன்ற உடல் நிலைகள், முத்திரைகள் என உடலின் அனைத்து பகுதிகளும் ஈடுபடும் ஒரு நடனம். இதில் மூன்று வகை உண்டு:
(1) மஹரி -- Mahari – பாரம்பரிய தேவதாசிகள் போன்ற நடனம்.
(2) நாடக்கி -- Nartaki – அரசவையில் ஆடப்பட்ட நடனம்.
(3) கோத்திபுவா -- Gotipua – ஆண்கள், பெண் வேடமிட்டு நடனம் ஆடுவது இந்த வகையின் சிறப்பு. இந்த நடனத்தின் தலைசிறந்த கலைஞர் -- குரு கேலுச்சரண் மஹோபத்ரா.
Q76. மணிப்பூர் மக்களின் புகழ்பெற்ற பாரம்பரிய நடனம் எது?
மணிப்பூரி -- MANIPURI: கிருஷ்ணரையும் ராதையையும் மையமாகக் கொண்டு ஆடப்படும் ஒரு வகையில் தெய்வீக நடனம். ரவீந்திரநாத் தாகூரால் மிகவும் போற்றப்பட்டு பரப்பப்பட்ட நடனக் கலை. கலைஞர்கள், வண்ண ஆடைகள் மற்றும் அலங்காரம் செய்து, ஒரு பாடகர், Pung எனப்படும் தாள வாத்யம், Pena எனப்படும் கம்பி இசைக்கருவி, மற்றும் புல்லாங்குழல் ஆகியவற்றுடன் நடத்தப்படும் நாட்டியக்கலை. Pung Cholom எனவும் அழைக்கப்படுகிறது.
Q77. பஞ்சாப் மாநிலத்தின் புகழ் பெற்ற நடனம் எது?
பங்ரா -- BHANGRA: ஒரு ஜனரஞ்சகமான நடன வகை. ஆண்கள், பெண்கள் என ஒரு கூட்டமாக சேர்ந்து ஆடும் நடனம். ஆண்கள் வண்ண வண்ண லுங்கிகள், குர்தா, தலைப்பாகை, பெண்கள் வண்ண வண்ண பாரம்பரிய உடையில், வாய்ப்பாட்டுடன் (போலி), தோல் Dhol (தாள வாத்யம்), தபலா, ஆகியவற்றுடன் ஆடப்படும் நடனம். வேகமான இசை, அதற்கேற்ற வேகமான உடல் அசைவு, இந்த நடனத்தை மிகவும் பிரபலமாக்கியது.
Q78. குஜராத் மாநில பாரம்பரிய நடனம் எது?
கர்பா -- GARBA: நவராத்திரி/ தசரா என்று சொல்லப்படும் காலத்தில் 9 நாட்களுக்கும் நடத்தப்படும் நடன நிகழ்ச்சி. ஒலிக்கப்படும் இசைக்கேற்றவாறு, நளினமாக கைத்தட்டல் உடன் நாட்டியமாடுவதே இது. இது குஜராத் மாநில நாட்டியம்.
தாண்டியா -- DANDIYA: கர்பா நடனத்தைப் போலவே, இசைக்கேற்றவாறு நளினமாக ஆடும் போது, கைகளில் குச்சியேந்தி, தாள வரிசையில் ஒருவருக்கொருவர் தட்டி ஓசை ஏற்படுத்துவதே இந்த நடனத்தின் சிறப்பு. (தமிழ் நாட்டின் கோலாட்டம் போல). பெண்கள் வண்ண வண்ண உடைகளும், ஆபரணங்களும் அணிந்து நாட்டியத்துக்கு ஒரு சிறப்பு ஈர்ப்பை உருவாக்குவர்.
Q79. இந்தியாவின் மற்ற மாநிலங்களின் புகழ் பெற்ற இசை/நடனக்கலைகள் யாவை?
1) அஸ்ஸாம் -- ASSAM: பிஹூகீத் மற்றும் சத்ரியா.
2) சத்தீஸ்கர் -- CHATTISGARH: பந்த்வாணி, பர்தாரி, சந்தேனி, நாச்சா, பந்தில் 3) கோவா -- GOA: மேண்டோ -- Mando – ஒரு வகை மின்னணு இசை நிகழ்ச்சி. போர்ச்சுகீசியர்களால் நீண்ட காலம் ஆளப்பட்டதால், மேற்கத்திய இசையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும், கோவாவினால் இந்திய இசைக்கு கிடைத்தது, மங்கேஷ்கர் குடும்பம், சுரஸ்ரீ கேசர்பாய் கேர்கர் மற்றும் ரீமோ ஃபெர்னான்டஸ் போன்ற இசை வல்லுநர்கள்.
4.ஹரியானா -- HARYANA: பட், சங்கி, ஜோகி ஆகிய கிராமிய இசைகள்.
5. இமாச்சலப் பிரதேசம் -- HIMACHAL PRADESH : ஜூரி, லமன், சம்ஸ்காரா, அய்ஞ்சலியான், சம்பா பங்கி போன்ற கிராமியக் கலைகளும், ஜூமர் என்ற கிராமிய நடனம்.
6. ஜார்க்கண்ட் -- JHARKHAND: ஜூமர் -- பழங்குடியினர் இசை; சாவ் - நடனம்.
7. மணிப்பூர் -- MANIPUR: குல்லோங் இஷாய், ஜரோபா இஷாய், பேனா இஷாய், தபல் சோங்கா, நபிபாலா, தங்நா, கௌர் படாஸ், குமை ஷாய் ஆகிய கிராமிய பாடல்/நடனங்கள்.
8. மேற்கு வங்காளம் -- WEST BENGAL -- கௌடிய நிருத்யா
7. தமிழ்நாடு -- TAMILNADU:
வில்லுப்பாட்டு -- Villuppattu: கிராமியக் கலை. இதில் ஒரு முக்கிய பாடகரும், அவருடன் இரண்டு அணிகளாக -- ஒரு பக்கம் கேள்வியாகவும், மறு புறம் பதிலாகவும் இசை வடிவத்தில், சமூக பிரச்சனைகளை எடுத்துப் பாடுவதே இந்தக் கலை.
கரகாட்டம் -- Karagaattam: ஆண், பெண் இருவரும் ஆடும் நடனம். தலையில் அலங்கரிக்கப் பட்ட குடத்தை வைத்துக் கொண்டு, வண்ண உடை மற்றும் அலங்காரத்துடன், தலையில் வைத்திருக்கும் கலசம் கீழே விழாதவாறு, இசைக்கேற்ப நடனம் ஆடுவது. இதைப் போன்று, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், மற்றும் இதர வகை நடனங்கள் பொதுவாக, கிராமப்புற திருவழாக்கள், கோவில் விழாக்கள் போன்ற நேரங்களில் தான் அதிகமாக நடத்தப்படுகிறது. இதற்கு பொதுவாக நாதஸ்வரம், தவில் போன்ற இசைக் கருவிகளும், சில நேரங்களில் திரைப்பட பாடல்களும் இசையாக பயன்படுத்தப் படுகின்றன. இவை அனைத்தும் இரவு நேரங்களில் நடத்தப்படுகின்றன.
இவை தவிர்த்து, ராஜஸ்தானில் கூமர் என்ற கிராமிய நடனமும், ஒடிசா, வங்காளம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ""சாவ்"" என்ற கிராமிய நடனமும், இதைப் போன்று ஆங்காங்கே பல சிறிய அளவில், கிராமிய நடனங்கள் மற்றும் இசையும் நிலவுகிறது.
Q80. இந்தியாவின் புகழ் பெற்ற இசை திருவிழாக்கள் யாவை?
(1) சவாய் கந்தர்வா இசை விழா -- SAWAI GANDHARVA MUSIC FESTIVAL : 1952ல் தொடங்கப் பட்டு, பூனே வில் வருடந்தோறும் 3 நாட்களுக்கு நடத்தப்படும் இந்துஸ்தானி இசை விழா. புகழ்பெற்ற இந்துஸ்தானி இசை கலைஞர்களால், கரானா வகை இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.
(2) தியாகராஜ ஆராதனை -- THIYAGARAJA ARAADHANAI: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு என்ற இடத்தில், வருடந்தோறும் ஜனவரி/பிப்ரவரி மாதங்களில், கர்நாடக இசையின் தியாகராஜரின் நினைவாக நடத்தப்படும் விழா. கர்நாடக இசை பாடகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய விழா. இதே போன்று, அமெரிக்காவின் சிகாகோ, க்ளீவ்லாண்ட், சால்ட் லேக் சிட்டி, உதா போன்ற இடத்திலும் நடத்தப்படுகிறது.
(3) மார்கழித் திருவிழா -- MARGHAZHI FESTIVAL : டிசம்பர் மாதத்தில், சென்னையில் நடத்தப்படும் இந்த விழாவில், புகழ் பெற்ற கலைஞர்கள், வளரும் கலைஞர்கள், கர்நாடக இசையின் வெளிநாட்டு கலைஞர்கள் என பலரும் கலந்து கொள்ளும் மிகப் பெரிய திருவிழா. கர்நாடக இசை ரசிகர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய மனநிறைவு விழா.
Q81. ஒரு சமயத்தில், பரத நாட்டியம், “Bagpipe” மற்றும் “Clarinet” எனப்படும் மேற்கத்திய இசைக்கருவிகளுடன் நடத்தப்பட்டு வந்தது. பிறகு, இந்த நடனக்கலைக்கு, வீணை மற்றும் புல்லாங்குழல் ஆகிய கருவிகளால் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதை செய்தவர் யார்?
ருக்மணி தேவி அருண்டேல் -- 1930களில்.
Q82. Rouff என்பது எந்த மாநிலத்தின் கிராமிய நடனக்கலை?
காஷ்மீர்.
Q83. ""பீட்டிள்ஸ்"" என்ற புகழ் பெற்ற மேற்கத்திய இசைக்குழுவின் நிறைவு பெறாத ஆல்பம் (தொகுப்பு) எது?
Let It Be.
Q84. இசைக்கு உலகளவில் புகழ்பெற்ற விருது எது?
க்ராமி விருதுகள் -- Grammy Awards.
Q85. இந்தியாவின் எந்த பாடகர், அதிகமான பாடல்களை பாடி பதிவு செய்து உள்ளார்?
லதா மங்கேஷ்கர்.